அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை மறுசீரமைப்பு செய்யப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஜெயலலிதாவின் பிறந்தநாளான நேற்று அவரது வெண்கல சிலை திறக்கப்பட்டது. ஆனால் நேற்று காலையில் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்டதில் இருந்து, சிலையில் இருப்பது ஜெயலலிதா போலவே இல்லை என்று சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றன.
பலரும் நடிகை பண்டரிபாய் ஜாடையில் இருக்கிறார் என்றும் , நடிகை காந்திமதி ஜாடையில் இருக்கிறார் என்றும் வளர்மதி ஜாடையில் இருக்கிறார் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். இன்னும் ஒரு படி மேல போய் தினகரன் கோஸ்டி பிரமுகர் நாஞ்சில் சம்பத் ஜெயலலிதா சிலை எடப்பாடியின் மனைவி போல் உள்ளது என்று நக்கல் அடித்தும் உள்ளார்.
இது அதிமுக வில் ஜெயலலிதா ரசிகர்களை மிகவும் பாதித்து உள்ளதாக உட்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் உலவும் சர்ச்சை குறித்து சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் " ஜெயலலிதா சிலையை வளர்மதி போன்றோருடன் ஒப்பிடுவதா?. அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டது ஜெயலலிதாவின் சிலை தான் என்பதை உண்மையான அதிமுக தொண்டர்கள் ஏற்கின்றனர். மனசாட்சி இல்லாத மிருகங்கள் தான் ஜெயலலிதாவின் புதிய சிலையை விமர்சிக்கும் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்."
ஆனால் தற்போது கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு காரணமாக தற்போது இந்த சிலையில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி ஜெயலலிதா சிலையில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பல்டி அடித்து அறிவித்துள்ளார்.
இதற்காக அந்த சிலையை செய்த சிற்பி மீண்டும் அழைக்கப்பட உள்ளார் என்றும் தெரிவித்து உள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலையில் உள்ள முகம் மறுசீரமைப்பு செய்யப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் தெரிவித்துள்ளார்.