காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பன உட்பட 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. ,
இதில் பேசிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் "தீர்ப்பின் 452 முதல் 457 வரையிலான பக்கங்களில், 1956-ஆம் வருடத்திய நதிநீர் தாவா சட்டத்தில் உள்ள "Scheme" என்பதை மனதில் வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும், 30.9.2017 அன்று மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது, இந்த "ஸ்கீம்" என்பதை உருவாக்குவதற்கு, மத்திய அரசுக்குத் தான் அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசின் சார்பில் வழக்கறிஞர் வாதிட்டார். "ஸ்கீம் உருவாக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்குத் தான் இருக்கிறது" என்ற மத்திய அரசின் வாதத்தை இப்போது வெளிவந்துள்ள தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், மீண்டும் மத்திய அரசு இதே கருத்தினைச் சொல்லிக் காலம் கடத்த அனுமதித்துவிடக் கூடாது. அதில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
ஆகவே, காவேரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் அளித்துள்ள 16.2.2018ஆம் தேதியிலிருந்து 6 வாரங்களுக்குள் உருவாக்க நாம் மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தர வேண்டும். இங்கே இருக்கின்ற அனைத்துக் கட்சி தலைவர்களையும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அழைத்து சென்று பிரதமரைச் சந்தித்து முதலில் "காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்துக் கொடுங்கள்" என்று வலியுறுத்த வேண்டும்.
மழை நீரைச் சேமித்து வைப்பது, வெள்ள காலங்களில் தண்ணீரைச் சேமித்து வைப்பது, குளம், ஏரிகள், ஆறுகள், அணைகள் போன்றவற்றை காலமுறை வாரியாகத் தூர்வாரி ஆழப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள "நீர்பாசனத்தை" பொதுப்பணித் துறையிலிருந்து பிரித்து, அதற்குத் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்றும்; வேளாண்மைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கையினைத் தயாரித்து வெளியிட வேண்டுமென்றும் தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி உரிமையை நிலைநாட்ட அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் முழுஅளவிலான ஆதரவை அளிக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். "இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் 30 அரசியல் கட்சிகள், 9 அரசியல் அமைப்புகள், 54 விவசாய அமைப்புகள் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கி.வீரமணி, சீமான், ஜவாஹிருல்லா, காதர் மொகிதீன்,திருநாவுக்கரசர், வைகோ, ஜி.கே. மணி ,ஏ.கே.மூர்த்தி,முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன், வாசன், எல்.கே.சுதீஷ், கிருஷ்ணசாமி, தமிமுன் அன்சாரி, தனியரசு, கொங்கு ஈஸ்வரன், சரத்குமார், கருணாஸ், செ.கு.தமிழரசன், வேல்முருகன், கிருஷ்ணசாமி, கதிரவன், ஜான் பாண்டியன், ஜெகன் மூர்த்தி, ஸ்ரீதர் வாண்டையார், புதிய நீதிக்கட்சி ரவிக்குமார், உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைவதை எதிர்க்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்காதது ஏமாற்றமளிப்பதாக காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தெரிவித்துள்ளார்.