புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும்; கடந்த 2016 ஜனவரி முதல் செப்டம்பர் 2017 வரையிலான 21 மாத கால 7ஆவது ஊதியக்குழுவின் நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த 112 சங்கங்களின் சார்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதையடுத்து சென்னை விருந்தினர் மாளிகையிலிருந்து கோட்டை நோக்கிப் பேரணியாகச் சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அவர்களைக் கைது செய்த போலீஸார் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இது குறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறுகையில், 'கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். தவறும் பட்சத்தில் வரும் பிப்.24-ஆம் தேதி இதேபோன்று பெண் ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவர். மேலும் பொதுத் தேர்வு பணிகளை புறக்கணிக்கவும் திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.
இந்த நிலையில் அதிமுக அரசின் மூர்க்கத்தனமான அணுகுமுறையால் தமிழகம் போராட்டக்களமாக மாறி வருவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தீர்த்து வைக்காமல் கால தாமதம் செய்துவிட்டு அவர்கள் போராடும்போது மட்டுமே கமிட்டிகள் போடுவது பொறுப்புள்ள அரசின் செயல்பாடு இல்லை" என்றும் அவர் விமர்சித்துள்ளார். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை அரசே மீறுவது, சட்டத்தின் ஆட்சியை அரசே மதிக்கவில்லை எனும் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பது மிகுந்த கவலையை அளிப்பதாக இருக்கிறது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு பல லட்சம் இளைஞர்கள் காத்திருக்கும்போது அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க கமிட்டி அமைப்பது அரசின் மூர்க்கத்தனமான அணுகுமுறையை காட்டுவதாகவும்" மு.க.ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை அடக்குவதில் கவனம் செலுத்தாமல், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுத்து தமிழகம் போராட்டக் களங்களாக உருவாகும் சூழலை தடுக்குமாறு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.