திமுகவில் இரு பதவிகள் வைத்திருப்பவர்கள் தாமாகவே முன்வந்து ஒரு பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அக் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக க.அன்பழகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு விவரம் :
மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் கள ஆய்வில் பங்கேற்போர் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் தலைமைக் கழகம் மேற்கொண்ட ஆய்வில் பல நிர்வாகிகள் இரு பதவிகளில் இருப்பது தெரிய வருகிறது. எனவே, இரு பதவிகள் வைத்திருக்கும் திமுகவினர் தாமாகவே முன்வந்து ஒரு பதவியை ராஜிநாமா செய்து மாவட்டச் செயலாளர்களிடம் உடனடியாக கடிதம் அளிக்க வேண்டும்.
அதனை மாவட்டச் செயலாளர்கள் உறுதி செய்வதோடு, அப்படி ராஜிநாமா செய்த பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அதன் விவரங்களை வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் தலைமைக் கழகத்துக்கு அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பொதுச்செயலாளர் க.அன்பழகனின் அறிவிப்பில், மாவட்டச் செயலாளர்கள் இரு பதவிகள் வைத்திருப்பது பற்றியோ, தலைமைக் கழக நிர்வாகிகள் இரு பதவிகள் வைத்திருப்பது பற்றியோ குறிப்பிடவில்லை. எனினும், அவர்களும் இரு பதவிகள் வைத்திருந்தால், ஒரு பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் செயல்தலைவர், பொருளாளர் என இரு பதவிகளை வகித்து வருகிறார். பொருளாளர் பதவியை வேறு ஒருவருக்கு அளிப்பது குறித்து அவரும் ஆலோசித்து வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.