நூற்றுக்கணக்கான ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி சந்தித்தபோது, அதற்கான ஏற்பாடுகளைக் கச்சிதமாகச் செய்தவர் சுதாகர். அதனால், சுதாகரை அவருக்கு ரொம்பப் பிடித்துப் போனது.

Special Correspondent

ஆனால் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக ராஜு மகாலிங்கம் திடீரென அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தப் பதவிக்குத் தற்போது ரசிகர் மன்ற நிர்வாகியாக இருக்கும் சுதாகர்தான் நியமிக்கப்படுவார் எனப் பேச்சு இருந்தது.

ராஜு மகாலிங்கம், 42 வயதுக்காரர். தேவகோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர். சென்னையில் படித்தவர். திருமணமானவர். பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களில் 15 ஆண்டுகள் தலைமை அதிகாரியாகப் பணியாற்றியவர். ரஜினியின் ‘2.0’ படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றியவர். அங்கிருந்தபோதுதான், ரஜினியுடன் அறிமுகம் கிடைத்தது. அவருடன் வெளிநாடுகளுக்குப் பயணித்தார். இவரது செயல்பாடுகளை ரஜினி பார்த்தார். அதே நேரத்தில், ரஜினியின் அரசியல் ஆர்வத்தில் ஈடுபாடு காட்டினார் ராஜு.

ஆனாலும், ‘சுதாகர் அடிக்கடி டென்ஷனாகிறார்’ என்பதை அறிந்து அன்றாட மன்ற நிர்வாகப் பணிகளை சுதாகரிடமும், அரசியல் திட்ட நகர்வுகளை ராஜுவிடமும் பிரித்து வழங்கியிருக்கிறார் ரஜினி. ‘இருவரும் எனக்கு இரட்டைக் குழல் துப்பாக்கிகள்... இணைந்து செயல்பட்டு மன்றத்தைப் பலப்படுத்துங்கள்’ என ரஜினி கேட்டுக்கொண்டாராம்.

‘‘ரஜினி மக்கள் மன்றத்தின் பொறுப்பாளர்களைப் புதியதாக நியமித்து வருகிறீர்களே? இதில் பணப் பேரமும், பதவி ஆசை உள்ளவர்களின் விளையாட்டும் நடப்பதாகப் புகார் கிளம்பியிருக்கிறதே?’’ என்ற கேள்விக்கு,

“ரஜினி ரசிகர் மன்றத்தில் யார் யாரெல்லாம் விசுவாசத்துடன் உழைத்தார்களோ, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பதவி தரப்படுகிறது. பல்வேறு கட்டங்களாக வடிகட்டித்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். முழுக்க முழுக்க நடுநிலைத் தன்மையுடன் தேர்வு நடக்கிறது. இதில் பேரம் நடக்க வாய்ப்பே இல்லை’’ என்றார் ராஜு மகாலிங்கம்.

நிர்வாகிகள் கூட்டங்களை முன்பிருந்தே இருவரும் இணைந்து நடத்தினாலும் புகைச்சல் வெடிப்பதை தெருக்களில் முளைக்கும் ரஜினி ரசிகர்கள் போஸ்டர் மூலம் அறிய முடிகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

"தப்பா நினைக்கக் கூடாது... இது போர்க்களம். தி.மு.க, அ.தி.மு.க என்கிற ஊழல் முதலைகள் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்திருக்கிறார்கள். அரசியல் அவர்களுக்கு தொழில். போலீஸ் மற்றும் தாதாக்கள் அவர்கள் பக்கம். தேர்தல் நேரத்தில் அந்த அரக்கர்களை நீங்கள் சமாளித்து மாவட்ட அளவில் அரசியல் செய்ய வேண்டும். அதற்குத் தேவை.. முதலில், பணம். அடுத்து, ஆள் பலம். ஜாதி ஆதரவு. நீங்கள் எத்தனை 'சி' செலவு செய்வீர்?" இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராத பழைய நிர்வாகிகள், "மன்றம் சார்பில் போஸ்டர் ஒட்டினோம். ஏதோ அன்றாடக் கூலியாக வேலை பார்க்கிறோம். ரஜினி எங்களின் தெய்வம். அவருக்காக வேலை செய்ய தைரியம் இருக்கிறது. நீங்கள் எதிர்பார்க்கும் பணம் எங்களிடம் இல்லை" என்று கைவிரிக்க... இதை எதிர்பார்த்தது போலவே, "ஓ.கே. பரவாயில்லை. ஒரு 'சி' க்கு மேல் செலவு செய்யக்கூடிய நபர் யாராவது நம் மன்றத்தில் இருக்கிறார்களா? நீங்களே அவர்களது பெயர்களை சிபாரிசு செய்யுங்கள். நாங்கள் அவர்களை நியமிக்கிறோம். உங்களுக்கும் மாவட்ட அளவில் கட்சியில் கௌரவப்பொறுப்புகள் தருகிறோம்" என்று கண்டிஷன் போடுகிறார்களாம் ரஜினியின் ஆலோசகர்கள்.

ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் பதவிக்கு கோடீஸ்வரர்கள்தான் வரமுடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது. இதைச் சுட்டிக்காட்டிய பழைய நிர்வாகிகள், "மன்றத்தைப் பற்றி ஏதும் தெரியாத அவர்கள் வந்து என்ன செய்வார்கள்? போட்ட பணத்தை அறுவடை செய்யத்தானே பார்ப்பார்கள்? அப்பேர்பட்ட பச்சோந்திகளுக்குப் பதவியா... அடியாட்கள் பலம் இருந்தால் போதுமா?" என்று கேட்க... "அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். ரஜினியை முதல்வராக அமர வைப்பதுதான் முதல் அஜென்டா. அவரை உட்கார வைத்தபிறகு, அடுத்து என்ன... எப்படி செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று பதில் வந்ததாம்.