ஆந்திரா மாநிலம் கடப்பா - திருப்பதி இடையே உள்ள ஒன்டிமெட்டா என்ற ஏரியில் ஜந்து பேர் மூழ்கி உயிரிழந்ததை போலீஸார் திங்கட்கிழமையன்று கண்டுபிடித்தனர். அங்கிருந்து மீட்கப்பட்ட ஐந்து பேரும் தமிழர்கள்தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Special Correspondent

உயிரிழந்த சி.முருகேசன், ஜெயராஜ், அ.முருகேசன், கருப்பண்ணன், சின்னப்பையன் ஆகிய 5 பேரும் சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த ஐந்து பேரின் சடலங்களும் கடப்பாவில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக ஆந்திர சிவில் லிபர்டிஸ் கமிட்டி கடப்பா மாவட்ட துணை தலைவர் வெங்கடேஷ்வரலு வெளியிட்ட அறிக்கையில், மரம் வெட்டுவதற்காக தமிழகத்தில் இருந்து வந்த தொழிலாளர்களாக இருக்க வாய்ப்புள்ளது என்றும், இந்த மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் இறந்து கிடந்த நீர்நிலையில் இடுப்பளவு தண்ணீர் மட்டுமே இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே அமைப்பின் மாநில துணைத் தலைவரான கிரந்தி சைதன்யா பிபிசி தமிழிடம் பேசியபோது, "இறந்தவர்களின் உடற்கூறாய்வானது தடயவியல் வல்லுநர்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த ஆய்வு வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்" என்றும் தெரிவித்தார். உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பின்புதான் எதையும் தீர்மானமாக கூறமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு செம்மரம் வெட்டியதாக 12 தமிழர்களை கைது செய்தது ஆந்திரா போலிஸ். அப்போது 4 பேர் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் தேடப்படுகிறார்கள் என அறிவித்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.