மக்களிடம் இருந்த பணத்தை வங்கிகளில் செலுத்த வைத்தார் பிரதமர் மோடி. அதை வைரவியாபாரி நீரவ் மோடி கொள்ளையடித்தார்' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக ராகுல், தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறிய விவரம் "இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் பேச வேண்டும். இந்த ஊழல் ஏன் நடைபெற்றது என்பது குறித்தும் எப்படி இது நடைபெற்றது என்பது குறித்தும் அவர் விளக்க வேண்டும்.
மேலும் இந்த ஊழல் நடைபெற்றபோது மோடி என்ன செய்து கொண்டிருந்தார்? அதையும் அவர் கூற வேண்டும். நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அறிவித்தார். அப்போது நாட்டின் ஒட்டுமொத்த பணத்தையும் அவர் வங்கிகளில் செலுத்தச் செய்தார். இப்போது அவரது நண்பர்கள், பெரு முதலாளிகளும் அந்த வங்கிகளில் இருந்து அந்தப் பணத்தைக் கொள்ளையடித்து விட்டனர்.
இவ்வளவு பெரிய முறைகேடானது அரசில் இடம்பெற்றுள்ளவர்களுக்குத் தெரியாமலோ அவர்களின் பாதுகாப்பு இல்லாமலோ நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை.
பிரதமர் ரூபாய் நோட்டு வாபஸ் போன்ற தனது நடவடிக்கைகள் மூலம் நாட்டின் நிதிகளை சேதப்படுத்தினார். தற்போது வங்கி அமைப்பை பாதுகாக்க அவர் என்ன செய்யப் போகிறார்...
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்றுள்ளது ரூ.20,000 கோடி மதிப்பிலான ஊழலாகும். இந்த ஊழலின் மதிப்பு என்று அந்த வங்கி, இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) தெரிவித்த ரூ.11,400 கோடி என்ற தொகையை விட இது இருமடங்காகும்.
இந்த ஊழலில் தொடர்புடைய தொகைமேலும் அதிகமாக இருக்கலாம் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அப்போது ஒப்புக் கொண்டது. எனினும், சரியான தொகையை அது வெளியிடவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் இதுவரை ஒரு வார்த்தையைக் கூட உதிர்க்காதது ஏன்...
அவருக்கு குழந்தைகள் தங்கள் பரீட்சையை எதிர்கொள்வது எப்படி என்று பேசுவதற்கு ஒன்றரை மணிநேரம் கிடைத்துள்ளது. ஆனால் இதற்குப் பதில் சொல்ல நேரம் கிடைக்கவில்லை.
பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் குறித்துப் பேச அவர் பல்வேறு அமைச்சர்களை அனுப்பியுள்ளார். முதலில் சமூக நீதித்துறை அமைச்சரும், அதன் பின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் அது பற்றிப் பேசினார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் பொறுப்பாகக் கூடிய பிரதமரும், நிதியமைச்சரும் (அருண் ஜேட்லி) தொடர்ந்து மௌனம் சாதித்து வருவது ஏன் என்றும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார் ராகுல் காந்தி.