ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடுவது தொடர்பாக தேனி மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் பழனிசெட்டிபட்டியில் நடந்தது. கூட்டத்தில் தமிழக துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசும்போது கூறிய விவரம் :
டெல்லியில் புதிய கட்சிக்காக 3 பெயரை குறிப்பிட்டு ஏதாவது ஒன்றை கொடுங்கள் என்று பிச்சை எடுப்பதுபோல் ஒருவர் (டி.டி.வி.தினகரன்) செய்கிறார். ஜெயலலிதா வழிநடத்திய லட்சியப்பாதையில் இந்த இயக்கம் செல்ல வேண்டும் என்று நான் தர்மயுத்தம் நடத்த இதுதான் பெரிய காரணம். நானும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து இந்த கட்சியையும், ஆட்சியையும் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
அ.தி.மு.க.வில் 1980-ல் நான் பெரியகுளம் வார்டு பிரதிநிதி. 1997-ல் நான் நகர செயலாளராக இருந்தபோது தான் டி.டி.வி.தினகரன் தேனிக்கு வந்தார். அ.தி.மு.க. வில் எனக்கு 17 வயது இருக்கும்போது, அவர் கைப்பிள்ளை. அவர் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேனிக்குள் நுழைவதற்கு முன்பாக, மாவட்டம் முழுவதும் விளம்பரப்படுத்திய முதல் நபர் நான்தான். பைசா காசு அவரிடம் நான் வாங்கியது இல்லை.
ஜெயலலிதா சிறைக்கு செல்லும் முன்பு பெங்களூரு நீதிமன்ற வளாகத்தில் என்னை அழைத்து நீங்கள் தான் முதல்-அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்று கூறினார். நத்தம் விசுவநாதனை அழைத்து, பன்னீர்செல்வம் தான் முதல்-அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்றும், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
அந்த காலகட்டத்தில் சசிகலா குடும்பத்தினர் எனக்கு கொடுத்த நெருக்கடிகள் ஏராளம். வேறு யாரேனும் எனது இடத்தில் இருந்து இருந்தால் தற்கொலை செய்து இருப்பார்கள். அல்லது கட்சியைவிட்டே போயிருப்பார்கள். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை தனது வீட்டு வாசலை தினகரன் மிதிக்கக்கூடாது என்று கூறினார்.
அப்பல்லோ மருத்துவ மனையில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த 38-வது நாள், அமெரிக்காவுக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்க வேண்டும், ஏதாவது ஆகிவிட்டது என்றால் தொண்டர்கள் நம்மை வீடுதேடி வந்து அடிப்பார்கள் என்று நான் கூறினேன். இதை அறிந்த மருத்துவ மனை நிர்வாகம் ‘எங்கள் மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லையா? அவர் நலமாக இருக்கிறார்’ என்று என்னிடம் கோபித்துக் கொண்டார்கள்.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் என்னை தோற்கடிக்க தினகரனும், தங்கதமிழ்செல்வனும் வேலை பார்த்தார்கள். ஆனால், நான் எனக்காக பிரசாரம் செய்தது மட்டுமின்றி தங்கதமிழ்செல்வன், கதிர்காமு, ஜக்கையன் என 3 பேருக்கும் நான் தான் செலவு செய்தேன். வாக்கு எண்ணும் வரை நான் தான் செலவு செய்தேன்.
தினகரன் போன்று மோசடி செய்து நான் சம்பாதிக்கவில்லை. எனது தந்தையிடம் பணம் கேட்கக்கூடாது என்று டீக்கடை நடத்தினேன். யாரையும் ஏமாற்றாமல் எந்த தொழில் செய்தாலும் கவுரவ குறைவு இல்லை. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, ‘பன்னீர் தோற்பான். கட்டிய வேட்டியோடு செல்வான்’ என்று சிறையில் இருக்கும் அந்த அம்மா (சசிகலா) சொன்னார்.
ஜெயலலிதாவுக்கு விசுவாசமாய் இருந்த காரணத்தால் மட்டுமே அந்த குடும்பம் என்னை துரோகி என்கிறது. இரு அணி இணைப்புக்கு முன்பு பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தேன். அப்போது அவர், கட்சியை காப்பாற்ற நீங்கள் இணைய வேண்டும் என்று கூறினார். நான், எனக்கு அமைச்சர் பதவி எதுவும் வேண்டாம் என்றும், கட்சியை காப்பாற்றினால் போதும் என்று கூறினேன். ஆனால், மோடி ‘நீங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும்’ என்று கூறினார். அதனால் தான் நான் அமைச்சராக இருக்கிறேன். பதவி ஆசை எனக்கு இல்லை. ஜெயலலிதா என்னை 2 முறை முதல்-அமைச்சர் ஆக்கிய பெருமையே எனக்கு போதும். இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
தமிழ் நாட்டில் காவிரி , மீதென் ., மீனவர் கைது , விவசாயி மரணம் உள்ளிட்ட 1008 பிரச்சனைகள் இருக்கும் போது இதில் எல்லாம் கவனம் செலுத்தாது அதிமுக உட்கட்சி பிரச்சனையில் மோடி தலையிட அவசியம் என்ன என்று தங்கதமிழ்செல்வன் பொதுகூட்டதில் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஓ. பன்னீர்செல்வம் பேச்சு பாஜகவை காட்டி கொடுத்து விட்டதாக சமூகவலைதத்திலே பதிந்து வருவதும் வைரல் ஆவதால் பாஜக வினர் கூட கடுப்பில் உள்ளனர் ..