மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமீபத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்து காரணமாக பெரும் சேதமடைந்தது. இதற்கு மின்கசிவு மற்றும் கோவிலின் உள்ள வைக்கப்பட்டிருந்த எளிதில் தீபிடிக்கும் பொருட்களே காரணம் என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆய்வு நடத்திய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவிலினுள் எளிதில் தீபிடிக்கும் பொருட்களான கற்பூரம், எண்ணெய், நெய், ஊதுபத்தி விற்பனைகள் நடைபெறுவதை கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து கோவில்களின் உள்பகுதியில் எளிதில் தீபிடிக்கும் பொருட்களை விற்பனை செய்த கடைகள், கோவிலினுள் இருந்த கடைகளை அகற்ற முதல்வர் உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் உள்ள கடைகளை அகற்றும் பணிகள் நேற்று இரவு முதல் தொடங்கின.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அறநிலையத்துறை கோவில்களிலும் இந்த பணிகள் நேற்று இரவு முதல் நடைபெற்றது. சுசீந்திரம் கோவிலின் முன்புறம் இருந்து சில கடைகள் நேற்று இரவு அகற்றப்பட்டன. இது குறித்து இந்து சமயஅறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி கூறிய விவரம் "கன்னியாகுமரி பகவதியம்மன், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜாகோவில், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில், வேளிமலை கோவில் உள்ளிட்ட பெரிய கோவில்கள் மற்றும் 23 சிறிய கோவில்களில் கோவில் வளாகத்தில் இருந்த எளிதில் தீபிடிக்கும் பொருட்களை விற்ற கடைகள் அனைத்து அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் நெய் தீபம் உள்ளிட்ட தீபங்கள், கற்பூரம் ஏற்ற இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது. பக்தர்கள் யாரும் தீபம், சூடகம் ஏற்ற கூடாது.
கோவிலின் உள்புறம் இருந்த அனைத்து வகையான கடைகளும் அகற்றப்படும். கோவில் கடைகள் ஏலம் எடுத்தவர்களும், அந்த கடை அகற்ற உத்தரவிடப்பட்டிருந்தால் இன்று முதல் கடை திறக்க கூடாது. அவர்களது ஏல தொகை கணக்கு பார்த்து திருப்பி கொடுக்கப்படும்.
பின்னர் கடைகளில் உள்ள பொருட்களை வியாபாரிகள் எடுக்கலாம். அதன் பின்னர் கடை அகற்றப்படும். சில கோவில்களில் அதிகபட்சமாக பிரசாத கடை, மலர் மற்றும் மாலை கடை, பன்னீர் கடைகள் அனுமதிக்கப்படும். பக்தர்கள் நெய் விளக்கு ஏற்ற விரும்பினால் அல்லது விளக்கேற்ற விரும்பினால் கோவிலில் எரிந்து கொண்டிருக்கும் வாடா விளக்கில் நெய் அல்லது எண்ணெயை ஊற்றலாம்" என்று கூறினார்.