தீ விபத்தை தொடர்ந்து கோயில்களில் உள்ள 15 ஆயிரம் கடைகளை அகற்றவும் 38 ஆயிரத்து 630 கோயில்களுக்குச் சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், கட்டிடங்கள், கடைகள், மனைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அதனை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் பாஜக அறநிலையதுறை ஒழிக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்து உள்ளதாக அக்கட்சி வட்டாரம் சோகத்துடன் தெரிவித்து உள்ளனர் .
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2ம் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், வீரவசந்தராயர் மண்டபம் இடிந்து விழுந்தது. கோயிலின் பழமைவாய்ந்த தூண்கள், சிற்பங்கள் பலத்த சேதம் அடைந்தன. ரூ.50 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகள், மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் உள்ளிட்டோர் தொடர் ஆய்வு நடத்தினர். மத்திய பாதுகாப்பு படையினரும் ஆய்வு செய்தனர். இதைதொடர்ந்து, தமிழக அரசு சார்பில் தீ விபத்து குறித்து விசாரிக்க 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கு கோயிலை சுற்றியுள்ள கடைகள்தான் காரணம் என்று பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, 9ம் தேதிக்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து தொடர்பாக, நேற்று முன்தினம் சென்னை,தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக, முதுநிலை அந்தஸ்துடைய பெரிய கோயில்களில் தீ தடுப்பு நடைமுறைகள், பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை உடனடியாக தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கு தேவைப்படும் பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள் மற்றும் அதற்கான நிதி தேவை குறித்து அறிக்கை தயார் செய்ய வேண்டும்.
அந்த அறிக்கையை தலைமை செயலாளர் தலைமையில், சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களை கொண்டு அமைக்கப்பட உள்ள குழுவிடம் 2 வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும். அந்த குழு பரிசீலித்து, தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த தனது பரிந்துரைகளை முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
உடனடி பாதுகாப்பு கருதி, கோயில் வளாகத்திற்குள்ளும், கோயில் மதில் சுவரை ஒட்டியும் அமைந்துள்ள கடைகளை உரிய வழிமுறைகளை பின்பற்றி அகற்றிட வேண்டும். மேலும், அவ்வாறு அகற்றப்பட்ட கடைகளை வேறு இடங்களில் ஒதுக்கீடு செய்யும் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.
முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள முதுநிலை அந்தஸ்துடைய பெரிய கோயில்களில் அமைந்துள்ள புராதன சிற்பங்கள், கல் தூண்கள், கட்டுமானங்கள் ஆகியவைகளுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம், பாதுகாப்பான மற்றும் தரமான மின் இணைப்புகளை அமைக்க வேண்டும்.
கோயில்களில் விளக்கு ஏற்றுவதற்காக பக்தர்கள் கொண்டு வரும் எண்ணெய், நெய் ஆகியவற்றை ஓரிடத்தில் சேகரித்து வைத்து, அதனையே கோயில்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
முதுநிலை அந்தஸ்துடைய பெரிய கோயில்களில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தீ தடுப்பு ஆய்வு செய்ய வேண்டும். தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்க வேண்டும்.
கோயில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அதனை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத் துறைக்கு தேவையான அளவில் தொழில்நுட்ப மற்றும் இதர பணியாளர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யவும், கோயில்களின் பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய காவலர்களை பணியமர்த்த தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36,590 கோயில்கள், 56 மடங்கள், 57 மடத்துடன் இணைந்த கோயில்கள், 1721 குறிப்பிட்ட அறக்கட்டளைகள், 189 அறக்கட்டளைகள், 17 சமண கோயில்கள் உட்பட 38 ஆயிரத்து 630 இந்து சமய, சமண சமய நிறுவனங்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு நஞ்செய் 1லட்சத்து 83 ஆயிரம் ஏக்கர்கள், புஞ்செய் 2 லட்சத்து 18 ஆயிரம் ஏக்கரும், 21 ஆயிரம் ஏக்கர் மானாவரி நிலங்கள் உட்பட 4 லட்சத்து 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. திருமடங்களுக்குச் சொந்தமான 56 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.
மாநிலம் முழுவதும் 22 ஆயிரத்து 600 கட்டிடங்களும், 33 ஆயிரத்து 665 மனைகளும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த அசையா சொத்துக்கள் மூலம் 6 ஆண்டுகளில் வெறும் 838 கோடி மட்டுமே வருமானமாக வந்துள்ளன. முதல்வர் உத்தரவிட்டபடி நடவடிக்கை எடுக்கப்பட்டால், பல ஆயிரம் கோடி சொத்துக்கள் இந்து அறநிலையத்துறைக்கு கிடைக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழக அரசு துரித நடவடிக்கையால் பாஜக வினர் கனவு தகர்ந்து உள்ளதாக சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.