தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து 2011 - 2016 இடையிலான காலக்கட்டத்தில் 116 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஜனநாயக சீரமைப்பு சங்கம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாநில முதல்வர்களின் சொத்து விபரம் மற்றும் அவர்கள் மீது உள்ள வழக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இவ்வாண்டு அவர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 177 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதல் இடத்திலும், திரிபுரா முதல்வர் மாணிக் சர்கார் 26 லட்சம் சொத்து மதிப்புடன் கடைசி இடமான 31வது இடத்திலும் இருக்கிறார்கள்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடும்ப சொத்து மதிப்பு 7 கோடியே 80 லட்சத்து 66 ஆயிரத்து 586 ரூபாய் (7,80,66,586). அதில் அசையும் சொத்துமதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 16 ஆயிரத்து ஆறு ரூபாய் (3,14,16,006), அசையா சொத்து 4 கோடியே 66 லட்சத்து 50 ஆயிரத்து ஐநூற்று என்பது ரூபாய் (4,66,50,580).
இந்த சொத்துமதிப்புடன் முதல்வர்கள் சொத்து மதிப்பு பட்டியலில் எடப்பாடி பழனிச்சாமி 12 வது இடத்தில் உள்ளார்.
2011 ஆம் ஆண்டு பொது தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, வேட்பு மனுவில், தனது சொத்து விபரமாக 3.67 கோடி ரூபாயை குறிப்பிட்டுள்ளார். அதில் அசையும் சொத்தாக 47,49,800.93 ரூபாயையும், அசையா சொத்தின் மதிப்பாக 3,19,65,901 ரூபாயையும் குறிப்பிட்டுள்ளார். இரண்டு தரவுகளையும் ஒப்பிட்டு பார்த்தால், எடப்பாடி குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 116 சதவீதம் உயர்ந்துள்ளது.
இரண்டு வேட்பு மனுவிலும் கல்வி தகுதியாக பி.எஸ்,சி தேர்ச்சி பெறவில்லை என்றும், தனது தொழில் விவசாயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்
அதிக சொத்துடைய முதல்வர்கள் பட்டியலில் சந்திரபாபு நாயுடுவுக்கு அடுத்தப்படியாக அருணாச்சல பிரதேச முதல்வர் பிமா கண்டு 129 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுடன் இரண்டாம் இடத்திலும், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் 48 கோடி மதிப்பிலான சொத்துகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
31 முதல்வர்களில், 11 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது கொலை சம்பந்தப்பட்ட வழக்கும், மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மீது கொடிய ஆயுதங்களை பயன்படுத்தியதாக வழக்கும் உள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது 10 வழக்குகள் உள்ளன. அதில் 4 வழக்குகள் தீவிரமானவை. அதில் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கும் அடங்கும்.