மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என அக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

Special Correspondent

கர்நாடக மாநிலம், கலபுர்கியில் தனியார் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் மற்றும் தொழிலதிபர்களுடனான கலந்துரையாடலில் அவர் பேசிய விவரம் இதோ :

மத்தியில் ஆளும் பாஜக அரசு 5 அடுக்கு முறையில் சரக்கு மற்றும் சேவை வரியை வசூலித்து வருகிறது. இதனால், தொழில் துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரும் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். அதை தீர்க்க முடியாமல் பாஜக அரசு திணறி வருகிறது.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றினால் 5 அடுக்கு முறையிலான சரக்கு மற்றும் சேவை வரியை, ஒரே அடுக்காக குறைத்து புதிய நடைமுறை அமல்படுத்தப்படும்.

மத்தியில் அமைச்சராக உள்ள அனைவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் வழிகாட்டுதலின்படியே நடந்து கொள்கின்றனர். ஆட்சி அதிகாரத்தின் அனைத்து துறைகளிலும் ஆர்எஸ்எஸ் தலையீடு அதிகம் உள்ளது.

அந்த அமைப்பின் கொள்கைகளை அமல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது. அண்டை நாடுகளுடன் நட்புறவாக நடந்து கொள்ள வேண்டும். சீனா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டால் மட்டுமே வர்த்தகத்தில் சிறந்து விளங்க முடியும். நமது நீண்ட நாள் தோழமை நாடான ரஷியாவிடம் இருந்து இந்தியா விலகியுள்ளது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது.

எனவே, மத்திய அரசு வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். அரசியலில் அதிக அளவில் பெண்கள் பங்கேற்க வேண்டும். முதல்வர், அமைச்சர்கள் போன்ற பதவிகளில் பெண்கள் அமர வேண்டும் என்பது எனது ஆசை என்றார் ராகுல் காந்தி.

நிகழ்ச்சியில், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனிடையே, பிதர் மாவட்டத்தின் பசவகல்யாண் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார். அவருக்கு செல்லும் இடம் எல்லாம் மாணவர்கள் கூட்டம் திரளாக வருவதால் பாஜக கலக்கம் அடைந்துள்ளாதாக தகவல் வருகிறது