திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரில் உள்ள சங்கரநாராயணர் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் 17 ஏக்கர் 62 சென்ட் நிலம் தனி நபருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த நிலத்தை திருமலை உள்ளிட்ட 14 பேருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், அதற்காக மிகக்குறைந்த தொகையே வாடகையாக பெறப்படுவதாகவும், அவர்களிடமிருந்து மீட்டு ஏலம் மூலம் குத்தகைக்கு விடக்கோரி முத்துசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:
கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், இந்த கோயில்களின் சொத்துக்களின் காவலனாக இருக்க வேண்டிய இந்துசமய அறநிலையத்துறை தனது பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது. கடந்த 2014ம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கோயில் சொத்துக்களை பாதுகாக்க குழு அமைக்க அறநிலையத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வழக்கை பொறுத்தவரை கோயில் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தி 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழக கோயில் சொத்துக்கள் யார் யார் வசம் உள்ளன என்பது குறித்து பத்திரிகை, கோயில் விளம்பர பலகைகள், இணையதளத்தில் வெளியிட வேண்டும். கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களைக் கண்டறிந்து சொத்துக்களை மீட்பதற்காக ஒரு குழுவை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அமைக்க வேண்டும்.
இந்த குழு உறுப்பினர்களை மண்டல வாரியாக அனுப்பி கோயில்களுக்கு சென்று ஆய்வு செய்து அந்த கோயில்களின் சொத்துக்கள், யாரிடம் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இதற்கு அந்தந்த தாலுகா தாசில்தார்கள் உதவி செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் இது குறித்து 6 வாரங்களுக்குள் இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கோயில் நிலங்களை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து 4 வாரத்துக்குள் வாடகைத் தொகையை செலுத்த வேண்டும்.
தவறுபவர்கள் மீது நிலத்தை மீட்பது தொடர்பான சட்டபடியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கோயில் சொத்துக்களுக்கு தற்போதைய சந்தைவிலையின் அடிப்படையில் வாடகையை நிர்ணயிக்க குழு ஒன்றை இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அமைக்க வேண்டும்.
நிர்ணயிக்கப்படும் வாடகையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு நிலத்தை தொடர்ந்து குத்தகைக்கு வழங்கலாம். புதிய வாடகையை ஏற்க மறுப்பவர்களிடமிருந்து நிலத்தை மீட்டு பொது ஏலம் மூலம் வாடகைக்கு விடவேண்டும். கோயில் நிலங்களை 5 ஆண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு வழங்கியது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாக 6 வாரத்தில் இந்து சமய அறநிலைய துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
வாடகை பாக்கி வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வாடகை வசூலிக்க தவறும் அதிகாரிகள் மீது அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிலம் மூலம் வரும் வருமானத்தை கோயில் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பூவந்திப்பட்டியில் ஆவுடைநாயகி அம்பாள் சமேத தேசிகநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் நிர்வாகியாக இருந்த முத்து செட்டியார் உள்ளிட்டோர் கோயில் சொத்துக்களை 3ம் நபருக்கு பதிவு செய்துள்ளனர் என்றும் விதிமுறைகளுக்கு முரணாக பதிவு செய்யப்பட்டுள்ள கோயில் சொத்துக்களை மீட்குமாறும், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிடக்கோரி அண்ணாமலை, தண்ணீர்மலை ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:
இந்த கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்குமாறு பரமக்குடி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரிடம் மனுதாரர்கள் முறையிட்டுள்ளனர். ஆனால், மாவட்ட முன்சீப் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறு உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கோயிலுக்குச் சொந்தமான சொத்தை விற்பனை ஒப்பந்தம் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால், இந்த வழக்கில் உள்ள கோயில் சொத்துக்களை விற்பனை ஒப்பந்தம் செய்ததில் ஆணையரின் ஒப்புதல் பெறப்படவில்லை. எனவே, இந்து சமய அறநிலையத்துறை சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.
எனவே, பரமக்குடி உதவி ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. போலியான முறையில் மோசடி செய்யும் நோக்கத்தில் இந்த கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
எனவே, இந்த சொத்துக்களை பதிவு செய்தது செல்லாது. மேலும், இதுபோன்ற கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களின் வருவாய் எவ்வளவு எனவும், அந்த வருவாய் எந்த பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக ஒரு விரிவான அறிக்கையை 4 வாரங்களுக்குள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.