பாஜக, ஊழல்கள் புரிவதில் புதிய உலக சாதனை படைத்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து 2ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் செய்தார். கொப்பள், ராய்ச்சுரு மாவட்டங்களில் பேருந்தில் அவர் சுற்றுப்பயணம் செய்து, மக்களைச் சந்தித்தார். அப்போது நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் அவர் பேசியதாவது: தேர்தல்கள் வரப் போகின்றன. இந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியையும், முதல்வர் சித்தராமையாவையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும். உங்களது அரசை (காங்கிரஸ் அரசு) மீண்டும் நீங்கள் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் உங்கள் நலனுக்காக எங்களால் பணியாற்ற முடியும்.
கர்நாடகத்தில் முன்பு ஆட்சியிலிருந்த பாஜக அரசு, 3 முதல்வர்களை கண்டது. எடியூரப்பா, அவரது அமைச்சரவை சகாக்கள் ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்று திரும்பினர். 11 அமைச்சர்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். பாஜக முந்தைய அரசு ஊழலில் மூழ்கியிருந்தது. ஆனால், முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு ஊழலில்லாத அரசாக திகழ்கிறது.
கர்நாடகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி, காங்கிரஸால் மட்டுமே சாத்தியப்படும். எனவே வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸூக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
கர்நாடகத்தில் முன்பு பாஜக அரசு ஆட்சியிலிருந்தபோது, ஒவ்வொரு ஊழலாக வெளிச்சத்துக்கு வந்தது. கர்நாடகத்தில் முந்தைய பாஜக அரசின் ஆட்சிக்காலத்தில், ஊழல்கள் புரிவதில் அனைத்து உலக சாதனைகளும் தகர்க்கப்பட்டன புதிய சாதனை படைத்து விட்டது என்றும் குறிப்பிட்டார்
ஹைதராபாத்-கர்நாடக பிராந்தியத்துக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின் 371(ஜே) பிரிவை திருத்தி சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டது. இதை எங்கள் அரசுதான் செய்தது. ஆனால், முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் துணை பிரதமராக இருந்த பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியோ, ஹைதராபாத்-கர்நாடக பிராந்தியத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கக் கூடாது; அப்படி கொடுத்தால், அது பண்டோரா பெட்டி போலாகிவிடும். பிறரும் இதே கோரிக்கைகளை முன்வைப்பர் என்று எதிர்ப்புத் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் விவசாயிகள் பெரும் துயரத்தை சந்தித்தபோது, விவசாயக் கடனை மத்திய பாஜக அரசு தள்ளுபடி செய்ய மறுத்து விட்டது. ஆனால் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு, அந்த கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்தது. இதுதான், பாஜகவுக்கும், காங்கிரஸூக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் ஆகும்.
நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின்கீழ் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டது என்றார் ராகுல் காந்தி.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமல் ஆகியவற்றை முன்வைத்தும் பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்தார். அப்போது அவர், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை "கப்பார் சிங் வரி' என்று அவர் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, பேருந்து மூலம் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்தார். அவருடன், முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. பரமேஸ்வரா உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் உடன் சென்றனர். அப்போது அவர்களை சாலையின் இருமருங்கிலும் திரண்டிருந்த பொது மக்கள் ஆரவாரம் எழுப்பி வரவேற்றனர்.