கூகுள் தேடுபொறியில் தேடும்போது விதிகளை மீறி தமது சொந்த வணிக தளத்துக்கு முன்னுரிமை அளித்த குற்றச்சாட்டில் கூகுள் நிறுவனத்துக்கு 136 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதுஇந்திய வணிகப் போட்டிஒழுங்குமுறை ஆணையம். மேலும் அறுபது நாட்களில் அபராதத் தொகையை செலுத்த வேண்டுமென்று கூகுள் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமானங்கள் குறித்து பயனர்கள் கூகுளில் தேடும்போது அது தன்னிச்சையாக கூகுளின் விமானங்கள் குறித்த சேவைக்கு செல்வதாக இந்தியாவில் நிறுவனங்களுக்கிடையேயான போட்டிகளை ஒழுங்குமுறைப்படுத்தும் வணிகப்போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (சிசிஐ) கண்டறிந்துள்ளது.
தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்திய கூகுள் நிறுவனம் அதன் போட்டியாளர்கள் மற்றும் பயனர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாக தனது 190 பக்க அறிக்கையில் சிசிஐ அமைப்பு விளக்கியுள்ளது.
விதிமுறைகளை மீறி செயல்பட்ட கூகுள் நிறுவனத்துக்கு 136 கோடி ரூபாய் அபராதம் விதித்த இந்திய அரசு கடந்த 2012 ஆம் ஆண்டு "பாரத் மேட்ரிமோனி டாட் காம்" என்ற இணையதளமும், நுகர்வோர் பாதுகாப்பு குழுவொன்றும் பதிவு செய்த குற்றச்சாட்டின் மீது நடந்த விசாரணையின் முடிவில் இந்த தீர்ப்பு வெளிவந்துள்ளது.
கூகுள் நிறுவனம் "தேடலில் மேற்கொண்ட பக்கச் சார்பின்" காரணமாக அதன் போட்டி நிறுவனங்களுக்கான வாய்ப்பு தடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய கூகுள் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், சிசிஐயின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
"புதிது புதிதாக உருவாகும் பயனர்களின் தேவையை நிறைவேற்றுவதில் புதுமையான வழிகளை கையாள்வதில் கவனம் செலுத்துவதாக" கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"சிசிஐ ஆராய்ந்த பெரும்பாலான விடயங்களில் எங்களின் செயல்பாடு இந்தியாவின் நிறுவனங்களுக்கிடையேயான போட்டி விதிகளை பின்பற்றப்படுவதை உறுதிசெய்துள்ளதாக" கூகுளின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது விதிக்கப்பட்டுள்ள அபராதமானது கூகுள் நிறுவனம் இந்தியாவில் ஈட்டும் ஓராண்டு வருமானத்தில் 5 சதவீதத்திற்கே சமமாகும் . மேலும் 2017 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் அதன் தேடலில் தனது சொந்த ஷாப்பிங் சேவைகளை ஊக்கப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் ஐரோப்பிய கமிஷன் கூகுளுக்கு விதித்த 2.4 பில்லியன் டாலர் அபராதம் என்பது குறிப்பிடதக்கது.
கடந்த வாரம் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் வெளியிட்ட காலாண்டு அறிக்கையில் அந்நிறுவனம் 6.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.