தமிழக சட்டசபை செயலாளர் க.பூபதி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்ட விவரம் :
ஜெயலலிதாவின் படம் பிப்ரவரி 12-ந் தேதி (நாளை) காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் திறந்து வைக்கப்படுகிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சட்டசபை முன்னவரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்தை சபாநாயகர் ப.தனபால் திறந்து வைப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
படத்திறப்பு விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை உரை நிகழ்த்துவார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை உரையாற்றுவார். சபாநாயகர் ப.தனபால் விழாப்பேருரை நிகழ்த்துவார். முன்னதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்று பேசுவார். இறுதியில் அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் நன்றி கூறுவார்.
இந்த விழாவுக்கு முன்னாள் சபாநாயகர்கள், சட்டசபையின் முன்னாள் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் அரசு அலுவலர் மூலம் நேரடியாக அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டசபையில் ஏற்கனவே மகாத்மாகாந்தி உள்பட 10 தலைவர்களின் படங்கள் மாட்டப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் வரைபடங்களாகும். அவை 7 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்டவை.
அதுபோல் ஜெயலலிதாவின் முழுஉருவ வண்ணப்படமும் அதே அளவில் வரையப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபையில் 6 பாகங்கள் உள்ளன. இதில் முதலாவது பாகத்துக்கும், இரண்டாவது பாகத்துக்கும் இடையே பின்பக்கத்தில் இடைவெளியை ஏற்படுத்தி அதில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை மாட்ட இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின் பிரதமரை சந்திப்பதற்காக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அவரை சந்தித்து பேசிய போது, தமிழக சட்டசபையில் நடக்கும் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில், படத்திறப்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவில்லை. மத்திய அரசில் இருந்தும் யாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவிக்கப்படவில்லை.
ஜெயலலிதாவின் படம் திறக்க கூடாது என்ற வழக்கு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் அவசர கதியில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று குற்றம் சாட்டியும், சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரின் படம் எப்படி சட்டமன்றத்திலே அதுவும் மூன்றே நாளில் திறக்கலாம் என்று திமுக பமக காங்கிரஸ் தேமுதிக கம்முனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அரசை கண்டித்து கேள்வி எழுப்பி உள்ளன.