குரூப் 4 பதவியில் 9351 காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வை 20.69 லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வு கண்காணிப்பு பணியில் 1.25 லட்சம் அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

Special Correspondent

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர்-494 இடம்,
இளநிலை உதவியாளர் (பிணையற்றது)- 4096,
இளநிலை உதவியாளர் (பிணையம்)-205,
வரித்தண்டலர் (கிரேடு 1)-48.
நில அளவர்-74,
வரைவாளர்-156,
தட்டச்சர்- 3463,
சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3)-815
என மொத்தம் 9351 காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியிட்டது.

இத்தேர்வுக்கு சுமார் 20 லட்சத்து 83 ஆயிரத்து 152 பேர் விண்ணப்பித்தனர். இதில் 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதில் ஆண் தேர்வர்கள் 941,878 பேர், பெண் தேர்வர்கள் 11,27,342, மூன்றாம் பாலினத்தவர் 54 பேர், மாற்றுத்திறனாளிகள் 25,906 பேர், ஆதரவற்ற விதவைகள் 7367 பேர், முன்னாள் படைவீரர்கள் 4107 பேர் அடங்குவர்.

சென்னையில் மட்டும் குரூப் 4 தேர்வை 1,60,120 பேர் எழுதுகின்றனர். இதற்காக 508 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 301 தாலுகா மையங்களில் 6962 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு பணியில் 1.25 லட்சம் ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதாவது தேர்வை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள் 6962 பேர், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் 1,03,500 பேர், தேர்வுக்கூட ஆய்வாளர்கள் 6962 பேர் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். தேர்வை கண்காணிக்க 1165 மொபைல் யூனிட்(நகரும் குழுக்கள்) அமைக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் வருவாய் கோட்ட அலுவலர், துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் இடம் பெற்றுள்ள 685 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 170 தேர்வு மையங்கள் இணையவழி மூலமாக கண்காணிக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைத்துத் தேர்வுக்கூடங்களும் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.

இத்தேர்வில் தேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவெண், விருப்பப்பாடம் மற்றும் தேர்வுக்கூடத்தின் பெயர் ஆகிய தனிப்பட்ட விவரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ள தனித்துவ விடைத்தாட்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தேர்வர்கள் வினாத்தாளில் விடையினை குறித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. தேர்வுத்தாளில் விடையளிக்காமல் விடப்பட்டுள்ள கட்டங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு குறிப்பிடும் வகையில் புதிதாக ஒரு காலம் சேர்க்கப்பட்டுள்ளது.

இதற்காக தேர்வு நேரத்திற்குப் பிறகு ஐந்து நிமிட கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுபவர்கள் மொைபல் போன், கால்குலேட்டர், மெமரி நோட்ஸ், கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில்லாமல் வருபவர்கள் கண்டிப்பாகத் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது.