சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.எச்.லோயாவின் திடீர் மரணம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர்.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தொடர்புடைய சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கை நீதிபதி லோயா விசாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரிணமூல் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தில்லியில் வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், "நீதிபதி லோயாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன. எனவே, நீதியை நிலை நிறுத்தும் வகையில், குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் சிபிஐ அல்லது மத்திய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தினால் அது நம்பிக்கை அளிக்காது. எனவே, நீதிபதி லோயா மரணம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும். அதில் இடம் பெறும் உறுப்பினர்களை உச்ச நீதிமன்றம் நேரடியாகத் தேர்வு செய்ய வேண்டும்.அப்போதுதான் நமது நீதி விசாரணை முறை குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும். இந்த விஷயத்தில் நீதியை நிலை நாட்டுவதற்காக உங்களுக்கு உள்ள அதிகாரத்தை நீங்கள் பயன்படுத்துவீர்கள் என்று முழு மனதுடன் நம்புகிறோம்' என்று கூறப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு அளித்த பிறகு செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது:
"நீதிபதி லோயா உள்பட 3 நீதிபதிகளின் மரணம் குறித்து எம்.பி.க்கள் பலருக்கு சந்தேகம் உள்ளது. இப்போது, லோயா மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று கூட்டாக குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளோம். அடுத்தகட்டமாக மற்ற நீதிபதிகள் மரணம் குறித்து விசாரணை கோருவதை முடிவு செய்வோம்.லோயா மரணம் குறித்த விசாரணை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை பெரும்பாலான எம்.பி.க்கள் விரும்பவில்லை. எங்கள் கோரிக்கை மனு குறித்து பரிசீலித்து முடிவெடுப்பதாக குடியரசுத் தலைவர் உறுதியளித்துள்ளார். எங்கள் கோரிக்கையை அவர் ஏற்பார் என்று நம்புகிறோம்" என்றார் ராகுல்.
சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.எச்.லோயா, கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி தன்னுடன் பணியாற்றுபவரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது . அமித் ஷா தொடர்புடைய சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி திடீரென மரணமடைந்தது குறித்து பல்வேறு தரப்பில் இருந்து சந்தேகம் எழுப்பப்பட்டது. "85 வயதாகும் லோயாவின் தந்தை இப்போது வரை நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். மேலும் லோயாவுக்கு எந்த நோயும் கிடையாது. எனவே அவரது மரணம் குறித்து சுதந்திரமான முறையில் விசாரிக்க வேண்டும்' என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்புகளில் இருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், நீதிபதி லோயாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளூர் தலைவர் மற்றும் பத்திரிகையாளர் ஒருவரும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
முதலில் நீதிபதி பி.எச்.லோயா குடும்பமும் தங்களிடம் சொல்லமால் நடந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று கூறி அவரின் மரணத்தில் சந்தேகம் எழுப்பி இருந்தது.
இந்த நிலையில் நான்கு நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பில் மீண்டும் இந்த விவகாரம் கூறித்து பேச, நீதிபதி லோயாவின் மகன் அனுஜ் (21), மும்பையில் கடந்த மாதம் செய்தியாளர்களைச் சந்தித்து "சில அரசியல்வாதிகளிடம் இருந்தும் அமைப்புகளிடம் இருந்தும் எங்கள் குடும்பத்துக்கு தொடர்ந்து நெருக்கடி அளிக்கப்படுகிறது. அவர்களின் பெயர்களைத் தெரிவிக்க விரும்பவில்லை. எனது தந்தையின் மரணம் குறித்து கேள்வி எழுப்பி எங்களை இனி யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். நாங்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கிறோம். யார் மீதும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. எனது தந்தை இயற்கையாகவே மரணமடைந்துள்ளார். இதனை எனது குடும்பம் ஏற்றுக் கொள்கிறது" என்றார்.
இந்த பேட்டி மூலம் நீதிபதி லோயா மரணத்தில் இருந்த சந்தேகம் மேலும் வலுவடைந்தது. லோயாவின் குடும்பத்தை அரசியல்வாதிகள் ஏன் மிரட்ட வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது.
இப்போது அளிக்கப்பட்ட மனுவில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்ளிட்ட 15 கட்சிகளைச் சேர்ந்த 114 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். அதே நேரத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி எம்.பிக்கள் இந்த மனுவில் கையெழுத்திடவில்லை.