மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு சப்தமாக சிரித்த காங்கிரஸ் எம்.பி. ரேணுகா செளத்ரியை, ராமாயணத்தில் வரும் எதிர்மறையான பெண் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு மோடி விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Special Correspondent

மாநிலங்களவையில் புதன்கிழமை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிக்கும் தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து மிகவும் ஆவேசமாக மோடி பேசினார்.

அப்போது, "கடந்த 1998-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானி, நாட்டு மக்கள் அனைவருக்கும் தனித்துவமிக்க தேசிய அடையாள அட்டையை (ஆதார்) வழக்க வேண்டும் என்ற யோசனையை முதலில் முன்வைத்தார். ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு தாங்கள்தான் ஆதார் அட்டைத் திட்டத்தை உருவாக்கியதாக பெருமை தேடிக் கொள்கிறது' என்றார். அப்போது, எதிர்க்கட்சி வரையில் அமர்ந்திருத்த ரேணுகா செளத்ரி, மோடியின் பேச்சை நிராகரிக்கும் வகையிலும், கேலி செய்யும் தொனியிலும் சப்தமாக சிரித்தார்.

இதையடுத்து குறுக்கிட்ட மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, "உங்களுக்கு எதுவும் பிரச்னை என்றால், தயவு செய்து மருத்துவரிடம் செல்லுங்கள்' என்று ரேணுகா செளத்ரியிடம் கூறினார்.

அப்போது மோடி, "அவர் சிரிப்பதைத் தடுக்க வேண்டாம். தொலைக்காட்சியில் ராமாயணம் தொடருக்குப் பிறகு இப்போதுதான் இப்படி ஒரு சிரிப்பை நாம் கேட்க முடிகிறது' என்றார். ராமாயணத் தொடரில் எதிர்மறையான பெண் கதாபாத்திரம்தான் இதுபோன்று சப்தமாக சிரிப்பதாகக் காட்டப்படும். அதனை நினைவூட்டும் வகையில் மோடி இவ்வாறு கூறினார்.

இதையடுத்து, மோடியின் கருத்துக்கு ரேணுகா செளத்ரி எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால், அது அவைக் குறிப்பில் ஏற்கப்படவில்லை. இதனிடையே, மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுந்து நின்று ரேணுகா செளத்ரிக்கு பதிலளிக்கும் வகையில் பேசினார். ஆனால், அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் ஸ்மிருதி இரானி பேசியது யாருக்கும் கேட்கவில்லை.

ஓருமணி நேரம் விடாம மோடி ஆவேசமாக பராளுமன்றத்திலே காங்கிரசை திட்டிய போதிலும் .,தேவை வேலைவாய்ப்புக்கள் சொற்பொழிவல்ல என்று சோனியா காந்தி அமைதியாக கூறி உள்ளார்