மதுரை ஆதினத்தின் 293-வது மடாதிபதி எனக் கூறியதை திரும்ப பெறுகிறேன் என்று நித்யானந்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Special Correspondent

கடந்த 2012-ம் ஆண்டு இந்த மடத்தின் 293-வது மடாதிபதியாக நித்யானந்தா அறிவிக்கப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது நித்யானந்தா, ஆதீனமாக நியமனம் செய்வதற்கு தகுதி உடையவர் அல்ல என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆதீன மடத்தில் இருந்து நித்யானந்தா வெளியேற்றப்பட்டார். அவர் மடத்திற்குள் நுழைய நீதிமன்றம் தடைவிதித்தது.

இந்த நிலையில் மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மதுரை ஆதீன மடத்தையும், அதன் விலை மதிப்பில்லா சொத்துக்களையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் மடத்திற்குள் செல்ல போலீஸ் பாதுகாப்பு கேட்டு நித்யானந்தா வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவிற்கு நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடந்த 2012ல் மதுரை ஆதீனத்தின் 293வது இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டேன். ஒரு முறை ஆதீனமாக நியமிக்கப்பட்டால், அவர் வாழ்க்கை முழுவதும் ஆதீனமாக இருப்பார். அந்த நியமனத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்த மனுவை திரும்ப பெறாவிட்டால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து அந்த மனுவை நித்யானந்தா திரும்ப பெற்று கொண்டதுடன், மன்னிப்பும் கோரினார்.

இதையடுத்து, இந்த வழக்கில் நித்யானந்தாவுக்கு நிபந்தனை வழங்கப்பட்டது. அதில், மதுரை ஆதீனத்துக்குள் நுழைய மாட்டேன் என்று நித்யானந்தா பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும்,பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தால் நித்யானந்தாவுக்கு எதிரான ஜெகதலபிரதாபன் வழக்கு முடிக்கப்படும் என்றும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யாவிடில் வழக்கை தொடர்ந்து சந்திக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.