திரையரங்குகளில் டிஜிட்டல் முறை ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்ச் 1-ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியீட்டை நிறுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவுசெய்துள்ளது. இதனால், புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கியூப், யு.எஃப்.ஓ. ஆகிய நிறுவனங்கள் தமிழகத் திரையரங்குகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படங்களைத் திரையிட்டு வருகின்றன. இந்த இரு நிறுவனங்களுக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வெவ்வேறு விதங்களில் பணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு படத்தை திரையிட்டு அதை திரையரங்கிலிருந்து எடுக்கும் வரைக்கும் அதிக நாட்களுக்கு ரூ.34,000 கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு வாரத்துக்குத் திரையிட ரூ.12,000 செலுத்த வேண்டும்.
இதனால், தயாரிப்பாளர்கள் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். அதே சமயத்தில், பிற நிறுவனங்கள் குறுகிய காலத்துக்குத் திரையிட ரூ.4,000 , நீண்ட காலத்துக்கு ரூ.12,000 கட்டணமாகப் பெறத் தயாராக உள்ளன. ஆனால், கியூப், யுஎஃப்ஓ ஆகிய இரு நிறுவனங்கள் அதிக தொகையைக் கேட்கின்றன.
இந்நிலையில், திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடுவதற்கான ஒளிபரப்புக் கட்டணத்தை அதிகமாகப் பெற்று வருவதைக் கண்டித்தும் சிறியமுதலீட்டுப் படங்களை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிரமத்துக்குத் தீர்வு காணும் விதமாகவும் வேலை நிறுத்தத்தைத் தொடங்க தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இது தொடர்யாபாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எந்த ஒரு திரைப்படத்தினையும் வெளியிடுவதில்லை என்று ஒட்டு மொத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சார்பாக நமது தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.