மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த 2ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரம் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 7000 சதுர அடி பரப்பளவு கொண்ட வீரவசந்தராயர் மண்டபம் சேதமடைந்துள்ளது.
இங்கிருந்த கலைநுட்பமிக்க தூண்களும் வெப்பம் தாங்காமல் நொறுங்கி விழுந்தன. மேலும் 40க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. இந்த இடிபாடுகள் முழுவதும் இதுவரையில் அகற்றப்படவில்லை. தீ முழுவதும் அணைக்கப்பட்டது. இருந்தபோதிலும் கோவிலில் உள்ள கற்கட்டிடத்தின் வெப்பம் முழுமையாக குறையவில்லை. இதையடுத்து தீயணைப்பு துறையினர் கடந்து இரண்டு நாட்களாக தொடர்ந்து தண்ணீரை தேக்கி வைத்து நடவடிக்கை எடுத்தததால், தற்போது வெப்பம் குறைந்துள்ளது.
பக்தர்கள் கிழக்கு கோபுரம் வழியைத் தவிர்த்து மற்ற வழிகளில் வழக்கம் போல் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கட்டிடத்தின் பாதிப்பு குறித்தும், தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்ய இன்று நிபுணர் குழு வர உள்ளனர்.
பொறியாளர்கள், அரசு அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு தீ விபத்து ஏற்பட்ட மீனாட்சி அம்மன் கோவிலை ஆய்வு செய்த பின்னரே, இடிபாடுகள் அகற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வீரவசந்தராயர் மண்டபத்தின் இடிபாடுகளை அகற்றிவிட்டு எவ்வித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து இந்த நிபுணர் குழு தமிழக அரசிடம் அறிக்கை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.