ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஜூனியர் உலகக் கோப்பை போட்டியின் இறுதிச்சுற்றை இந்திய அணி வென்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

Special Correspondent

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இரு அணிகளுமே தலா 3 முறை உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், 4-ஆவது முறையாக வாகை சூட இரு அணிகளுமே கடுமையாகப் போட்டியிட்டன.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி 47.2 ஓவர்களில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மெர்லோ அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் இஷான் போரெல், ஷிவா சிங், நாகர்கோடி, அனுகுல் ராய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சுலபமாக எதிர்கொண்ட இந்திய அணி, 38.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 220 ரன்களில் இலக்கை எட்டி கோப்பையைக் கைப்பற்றியது. மன்ஜோத் கல்ரா 101, தேசாய் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

கடந்த வார இறுதியில் ஏழு யு-19 இந்திய வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் தேர்வானார்கள். இவர்களில் நான்கு பேருக்கு ஒரு கோடிக்கும் அதிகமான சம்பளம் கிடைத்தது. நாகர்கோடி அதிகபட்சமாக ரூ. 3.20 கோடிக்குத் தேர்வானார். கொல்கத்தா அணி அவரை நம்பி கோடிகளைக் கொட்டத் தயாராக இருந்தது. இன்று சதமடித்த கல்ராவை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது தில்லி டேர்டெவில்ஸ்.

இந்நிலையில் இந்த வார இறுதியில் இளையோர் உலக சாம்பியன்களாக இவர்கள் மீண்டும் சாதித்துள்ளார்கள். 19 வயதில் ஒரு வார இடைவெளியில் மகத்தான தருணங்கள் இவர்களுக்குக் கிடைத்துள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் தேர்வான இந்திய யு-19 வீரர்கள் விவரம் :

கமலேஷ் நாகர்கோடி - கொல்கத்தா - ரூ. 3.20 கோடி
ஷிவம் மவி - கொல்கத்தா - ரூ. 3 கோடி
ஷுப்மன் கில் - கொல்கத்தா - ரூ. 1.80 கோடி
பிருத்வி ஷா - தில்லி - ரூ. 1.20 கோடி
அபிஷேக் சர்மா - தில்லி - ரூ. 55 லட்சம்
மன்ஜோத் கல்ரா - தில்லி - ரூ. 20 லட்சம்
அனுகுல் ராய் - மும்பை - ரூ. 20 லட்சம்