கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.கணபதி, உதவி பேராசிரியர் பணி வாங்கித் தருவதாகக் கூறி சுரேஷ் என்பவரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறையால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

Special Correspondent

உதவி பேராசிரியர் பணி வாங்கித் தருவதாகக் கூறி கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.கணபதி தன்னிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கமாகவும், மீதி 29 லட்சத்துக்கு காசோலையாகவும் பெற்றதாக சுரேஷ் என்பவர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து துணைவேந்தர் கணபதியின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடந்த விசாரணையில் ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக துணைவேந்தர் கணபதியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கணபதி நியமிக்கப்பட்டார்.

உதவி பேராசிரியர் பணி நியமனத்தில், துணைவேந்தர் கணபதியுடன் இணைந்து வேதியியல் பேராசிரியர் தர்மராஜ் இடைத்தரகராக செயல்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டதால் அவரும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தடயத்தை அழிக்க முயன்ற குற்றத்துக்காக பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் மனைவி சொர்ணலதாவும் கைது செய்யப்பட்டார்.

இவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனைகளின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை இந்நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இருப்பினும் சோதனை மற்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.