கொடிவீரன் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்த நடிகை சனுஷா, ரேணிகுண்டா, அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

Special Correspondent

நேற்று, கண்ணூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு மாவேலி விரைவு ரயிலில் 23 வயது சனுஷா பயணம் செய்தார். தன்னுடைய பெர்த்தில் அவர் படுத்திருந்தபோது பக்கத்துக்கு பெர்த்தில் இருந்த ஆண்டோ போஸ் என்கிற கன்னியாகுமரியைச் சேர்ந்த 40 வயது நபர், சனுஷாவுக்குப் பாலியல் தொல்லை தர முயன்றுள்ளார்.

இதையடுத்து உடனடியாக ரயில்வே காவல்துறையிடம் சனுஷா புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஆண்டோ போஸ் கைதானார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

"நான் அப்பர் பெர்த்தில் படுத்திருந்தேன். அப்போது யாரோ என் உதட்டின் மீது கையை வைத்து தேய்ப்பது தெரிந்தது. உடனே விழித்துக்கொண்டேன். அந்த நபரின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு லைட்டை ஆன் செய்தேன். உடனே, இதைப் பெரிதாக்கவேண்டாம் என அந்த நபர் என்னிடம் கெஞ்சினான். எனக்குக் கீழே உள்ள பெர்த்தில் படுத்திருந்தவரிடம் உதவி கோரினேன். ஆனால் அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை. எனக்கு உதவுமாறு கதறினேன். ஆனால் அந்த கோச்சில் இருந்த பெண்கள் உள்பட யாரும் எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அதிகாலை 1.10 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றது. திரைக்கதையாசிரியர் உன்னி மற்றும் மற்றொரு சக பயணி என இருவர் மட்டுமே என் உதவிக்கு வந்தார்கள்.

இருவரும் டிடிஆரைத் தேடிச் சென்றார்கள். எனக்குப் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவரை நான் விடாமல் பிடித்துக்கொண்டேன். அந்த நபரை காவல்துறை கைது செய்யும்வரை நான் நகரவில்லை. டிடிஆர் வந்தபிறகு அவர் உடனடியாக ரயில்வே காவல்துறைக்குப் புகார் அளித்தார். அரை மணி நேரம் கழித்து திருச்சூர் ரயில் நிலையம் வந்தபிறகு ரயில்வே காவல்துறை அந்த நபரைக் கைது செய்தார்கள். நான் என் வாக்குமூலத்தை அளித்துவிட்டு பிறகு அதே ரயிலில் திருவனந்தபுரத்துக்குப் பயணம் செய்தேன்.

என்னை மிகவும் காயப்படுத்துவது என்னவென்றால், ரயிலில் இருவர் தவிர வேறு யாரும் அந்த நபரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சமூகவலைத்தளங்களில் பெண்களுக்கு நேரும் கொடுமைகளை எதிர்ப்பவர்கள் அதை நேரில் காணும்போது அமைதியாக நகர்ந்துவிடுகிறார்கள். பாலியல் தொல்லையால் அவதிப்பட நேர்ந்தால் பெண்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். காலதாமதம் கூடாது. இப்படியொரு சம்பவம் நடந்தபிறகும் எனக்கு யாரும் உதவாதது குறித்து மிகவும் மனமுடைந்துள்ளேன். இந்தச் சமூகத்தின் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது" என்று வேதனையுடன் பேட்டியளித்துள்ளார்.