நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26 ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்தச் சந்திப்பு இன்றுடன் முடிவடைகிறது.
கடந்த முறை ரசிகர்களுடனான சந்திப்பின் தொடக்க விழாவில் இயக்குனர் முத்துராமனை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். இந்த சந்திப்பின்போது இயக்குனர் மகேந்திரன், தயாரிப்பாளர் கலைஞானம் ஆகியோர் வந்திருந்தனர்.
இந்நிலையில், இன்று அவர் பேசும்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றார். அவர் மேலும் கூறியதாவது:
ரசிகர்களை எப்படி பாராட்டன்னு தெரியலை. கட்டுப்பாட்டோடு நீங்க இருந்ததில் மகிழ்ச்சி. இந்தக் கட்டுப்பாடு இருந்தா போதும் என்ன வேணாலும் சாதிக்கலாம். ரொம்ப பில்டப் ஆகிடுச்சா? நான் பில்டப் கொடுக்கலைங்க. எனக்கு அரசியலுக்கு வருவதை பார்த்து பயமில்லை. எனக்கு மீடியாவை பார்த்துதான் பயம். நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். சட்டமன்ற தோர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம்.
நான் பணத்துக்கோ புகழுக்கோ அரசியலுக்கு வரவில்லை. 45 வயசுலயே எனக்கு பதவி ஆசை இல்லை. இப்ப வருமா? வேறு எதற்கு நான் அரசியலுக்கு வருகிறேன். அரசியல் ரொம்ப கெட்டுப் போச்சு. ஜனநாயகம் சீர்கெட்டுப் போச்சு. கடந்த ஒரு ஆண்டில் சில அரசியல் சம்பவங்கள் தமிழ்நாட்டு மக்களை தலைகுனிய வச்சிருக்கு. அரசியல் மாற்றத்துக்கு நேரம் வந்தாச்சு. உண்மையான , ஜாதி மதத்துக்கு அப்பாற்றப்பட்ட ஆன்மிக அரசியலை உருவாக்கணும். அது தனிப்பட்ட மனிதனால் முடியாது. சாதாரண விஷயமில்லைன்னு எனக்கு தெரியும். ஆண்டவன் அருள், மக்கள் நம்பிக்கை, அவங்க அபிமானம், அவங்க ஒத்துழைப்பு இருந்தாதான் சாதிக்க முடியும்.
பழைய காலத்துல ராஜாக்கள் இன்னொரு நாட்டுல போய் கொள்ளை அடிச்சாங்க. ஆனா, இங்க சொந்த நாட்டிலேயே கொள்ளை அடிச்சிட்டிருக்காங்க. சிஸ்டத்தை மாத்தணும். எனக்கு தொண்டர்கள் வேண்டாம். காவலர்கள் வேணும். யார் தப்பு செஞ்சாலும் தட்டிக் கேட்க காவலர்கள் வேணும். அந்த காவலர்களை கண்காணிக்கிற பிரதிநிதிதான் நான்.
பதிவு செய்யப்பட்ட நமது மன்றங்கள் ஆயிரக்கணக்குல இருக்கு. பதிவுசெய்யாதது அதுக்கு மேல இருக்கு. அவங்களை ஒன்றிணைக்கணும். எல்லாரையும் இந்த மன்றதுக்குள்ள கொண்டு வரணும். கிராமத்தில் இருக்கிற ஒவ்வொரு தெருவுக்குள்ளயும் நம்ம மன்றங்கள் இருக்கணும்.
யாரையும் குறை சொல்ல வேண்டாம். நமக்கு நீந்த தெரியும். குளத்துல இறங்கிய பிறகு நீந்தலாம். வரும் சட்டமன்ற தேர்தல் என்னைக்கு வருதோ, அன்னைக்கு கட்சி ஆரம்பித்து, என்ன செய்யப் போறோம்னு சொல்லி மக்கள் மத்தியில் போவோம்" இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.