முஸ்லிம்களிடையே முத்தலாக் மூலம் விவாகரத்து பெறும் நடைமுறை இருந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

Special Correspondent

இதையடுத்து பாராளுமன்றத்தில் இன்று முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் இதை தாக்கல் செய்தார். இந்த மசோதாவில், 3 ஆண்டுகள் சிறை தண்டனை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்டன.

இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக எம்.பி அன்வர் ராஜா முத்தலாக் மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மக்களவையில் கோரிக்கை வைத்தார்.

உறுப்பினர்கள் விவாதத்திற்கு பிறகு, இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. ஒரே தடவை மூன்று முறை முத்தலாக் கூறிவிவகாரத்து செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்யும்.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவைக்கு அனுப்பப்படும். மாநிலங்களவையில், இந்த மசோதாவுக்கு கடும் சவால் காத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இன்று காலை, தனது கட்சி எம்.பிக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு இந்த மசோதா நிறைவேற்றப்படும் என நம்புவதாக தெரிவித்து இருந்தார்.