சட்டமன்ற செயலாளர் க.பூபதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘சட்டமன்ற கூட்டத்தை வருகிற 8ம் தேதி காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூட்டியிருக்கிறார். அன்று காலை 10 மணிக்கு கவர்னர் உரை நிகழ்த்த உள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், சட்டப்பேரவையில் உரையாற்றுகிறார். ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட உரையை கவர்னர் படித்து முடித்ததும், அதன் தமிழ் உரையை சட்டப்பேரவை தலைவர் தனபால் படிப்பார். அத்துடன் அன்றைய கூட்டம் முடிக்கப்படும். பின்னர், பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும்.

Special Correspondent

இதில் கவர்னர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவு செய்து அறிவிக்கப்படும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கவர்னர் உரையில் தமிழக அரசின் புதிய திட்டம், அதற்கான நிதி குறித்த விவரங்கள் இடம்பெறும். கவர்னர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அதிகப்பட்சமாக 3 அல்லது 4 நாட்கள் நடைபெறலாம். கவர்னர் உரை மீதான விவாதத்துக்கு நன்றி தெரிவித்து இறுதிநாள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசுவார். அதைத்தொடர்ந்து பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்படும். அதைத்தொடர்ந்து மார்ச் மாதம் 2017-2018ம் ஆண்டுக்கான தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

கவர்னர் உரையுடன் 8ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப உள்ளனர். அதாவது குறிப்பாக மழை பாதிப்பு, ஓகி புயல் பாதிப்பு, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேடு, போக்குவரத்து, மின்வாரிய ஊழியர் பிரச்னைகள், ஆர்கேநகர் தேர்தல் மற்றும் மாவட்டங்களில் கவர்னர் பன்வாரிலால் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகளை எழுப்ப உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரனும் முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் செல்கிறார். இதனால், அவரது வருகையும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்று நடைபெறும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டப்பேரவை கூட்டம் தொடங்க உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சபாநாயகர் தனபாலை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்...