இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் ரேசன் பொருட்களை நம்பித்தான் உயிர்வாழ்கிறார்கள். ஆனால், அதை வாங்குவதற்கும் ‘ஆதார் கட்டாயம்’ என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டதில் இருந்து, அதுவும் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் விளிம்புநிலை மக்கள்.

Special Correspondent

இதன் தொடர்ச்சியாக பிஜேபி அரசின் ஜார்க்கண்ட் மாநிலம் கோர்டா கிராமத்தில், கடந்த டிசம்பர் 1ஆம் தேதி பட்டினி கிடந்ததால் பிரேம்னி குன்வார் என்ற 64 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

இவரது 13 வயது மகன் உத்தம் தனது தாய் பட்டினி கிடந்ததன் காரணத்தை இப்படி விவரிக்கிறார். ‘என் அப்பா சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர் இறந்தபின்பு என் அம்மாவிற்கு வரும் பென்சன் தொகையை வைத்துதான் எங்கள் வாழ்க்கை நகர்ந்தது. கடந்த இரண்டு மாதங்களாக அதுவும் கிடைக்கவில்லை.

நவம்பர் 29ஆம் தேதி ரேசன் கடைக்கு சென்றபோது, கைரேகையை வாங்கிவிட்டு, டிசம்பர் 2ஆம் தேதி வருமாறு கூறிவிட்டனர். டிசம்பர் 1ஆம் தேதி என் அம்மாவின் உயிர் பிரிந்துவிட்டது. அதுவரை நானும், அவரும் பட்டினியாகத் தான் கிடந்தோம்’.

இதனை போலவே கடந்த அக்டோபர் மாதம் இதே மாநிலத்தில் கொய்லி தேவி என்ற பெண்ணின் சின்ன மகள் பட்டினியால் உயிரிழந்தார். ‘ஆதாரோடு ரேசன் அட்டையை இணைக்காததால் உணவுப் பொருட்கள் கிடைக்காமல், பட்டினி கிடந்ததால்தான் தம் மகள் இறந்துவிட்டார். இது இந்த நாட்டிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய கேவலம்’ என்கிறார் கொய்லி தேவி.

சில தினங்களுக்கு முன்னர் உலக அளவில் பசி பட்டியலில் இந்தியா 100ஆவது இடம் பின்தங்கி வகிப்பதாகக் கூறப்பட்டது.

தகவல் தொழில்நுட்பங்களில் உயர்மட்டத்தை எட்டிப் பிடித்தால் மட்டும் போதாது, மக்களின் அத்தியாவசியங்களுக்கும் தீர்வு வேண்டும் என்பதை மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு, பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் நிகழும் பட்டினி மரணங்கள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன என்று சமூக ஆர்வலர்கள் பிஜேபி அரசின் கொள்கை முடிவுகளை கண்டித்த வண்ணம் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.