சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 3வது நாளாக சேலம், நாமக்கல், விருதிநகர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தனது ரசிகர்களுடன் நடிகர் ரஜினி இன்று வியாழக்கிழமை (டிச.28) சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார்.
அப்போது ரசிகர்களிடம் ரஜினி பேசுகையில், நான் பெங்களூருவில் இருக்கும் போது ராஜ்குமாரின் ரசிகன். மதுரை என்றாலே வீரத்தின் அடையாளம். அங்கிருந்து வந்துள்ள உங்களையெல்லாம் பார்க்க மகிழச்சியாக உள்ளது. உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி கறி சோறு போட ஆசை. ஆனால், ராகவேந்திரா மண்டபத்தில் முழுக்க சைவம். வேறு இடத்தில் ஒருமுறை அதை பார்ப்போம்.
உங்களின் உற்சாகம் உணர்ச்சியை புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் வயதை தாண்டி வந்தவன்தான் நானும். சலிப்பு இல்லாமல், காத்திருந்து என்னை சந்திக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
உயிர் கொடுத்தவர் கடவுள். உடல் கொடுத்தவர்கள் தாய்-தந்தை. கடவுள், தாய், தந்தை ஆகிய மூன்று பேரின் காலில் மட்டுமே விழ வேண்டும்.அதற்கு பிறகு பெரியவர்கள் காலில் விழ வேண்டும். வயதான பெரியவர்கள் காலில் விழுவது ஏன் என்றால், இந்த கஷ்டமான வாழ்க்கையை நடந்து கடந்து வந்தவர்கள் அவர்கள்.
அந்த பாதைகளில் நாமும் நடக்கப்போகிறோம் என்பதால், அவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெறலாம். ஆனால், மற்றபடி, பணம், பதவி, புகழ், அதிகாரம் உள்ளவர்கள் காலில் விழ வேண்டிய அவசியமில்லை, விழாதீர்கள் என்று ரஜினி தனது ரசிகர்களிடையே பேசுகையில் கேட்டுக்கொண்டார்.