மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, கீழப்பூங்குடியில் இருந்து லாரிகள் மூலம் தினமும் மணல் ஏற்றப்பட்டு கொண்டு வரப்படும் மணல், ரிங்ரோட்டில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

Special Correspondent

கடந்தாண்டு இரண்டரை யூனிட் ரூ.10 ஆயிரத்து 500க்கும், மூன்றரை யூனிட் ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, கீழப்பூங்குடியில் உள்ள மணல் குவாரிகளுக்கு மீண்டும் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் திருச்சி அருகே திருவாச்சி பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் மணலை நம்பியே மதுரை மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன. திருச்சியிலும் போதுமான அளவு மணல் அள்ள அனுமதியில்லாததால் வாரத்தில் 2 நாட்கள், அதாவது 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மதுரை மாவட்டத்திற்கு மணல் லாரிகள் வந்து கொண்டிருந்தன. இதனால் கடந்த மார்ச் முதல் மணல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், மணல் குவாரிகளை 6 மாதத்திற்குள் மூட வேண்டுமென ஐகோர்ட் உத்தரவிட்டது. புதிதாக மணல் குவாரிகளுக்கு அனுமதியும் தரப்படவில்லை.

இதனால் மணல் விலை படிப்படியாக உயர்ந்து, இன்று மூன்றரை யூனிட் மணல் ரூ.40 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. இரண்டரை யூனிட் விலை ரூ.24 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. கடந்த மார்ச் மாதம் ஒரு யூனிட் மணல் ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையானது. மூன்றரை யூனிட் மணல் ரூ.10 ஆயிரத்திற்கு 500க்கு விற்பனையானது. தற்போது மூன்றரை யூனிட் மணல் ரூ.40 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. இதனால் கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது.

இதுகுறித்து மணல் விற்பனையாளர்கள் கூறுகையில், ‘‘மதுரை மாவட்டத்துக்கு ஒரு நாளைக்கு 2500 யூனிட் மணல் தேவைப்படும். விலை உயர்வு காரணமாக தினமும் 1000 யூனிட் மணலுக்கும் குறைவாக விற்பனையாகிறது.

4 நாட்களுக்கு ஒருமுறை 300 லாரிகளில் மட்டுமே மணல் வருவதால் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது. நாகை அருகே படரங்கம், கடகம் ஆகிய 2 இடங்களில் இருந்து மட்டும் மணல் கொண்டு வரப்படுகிறது.

அதனால் டீசல், லாரி வாடகை என கூடுதல் செலவு ஆகிறது. 6 மாதத்திற்குள் மணல் குவாரிகள் மூடப்பட வேண்டுமென்ற ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் மேல் முறையீடு செய்துள்ளனர்.

இதில் கிடைக்கும் தீர்ப்புக்கு பின்னர்தான் மணல் விலை முடிவு செய்யப்படும். மணல் விலை உயர்வை கட்டுப்படுத்தும்படி முதல்வரிடம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பல்வேறு சங்கங்கள் சார்பில் நேரில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை’’ என்றார்