மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரை பறித்தது முனிசேகர் துப்பாக்கிதான் என்பது உறுதியாகியுள்ளது. ராஜஸ்தானில் நாதுராமை பிடித்த போது முனிசேகரின் குண்டு குறிதவறி ஆய்வாளர் பெரிபாண்டியனை மீது பாய்ந்தது.
ராஜஸ்தான் காவல்துறை கூறியதை சென்னை காவல்துறையினரும் உறுதிப்படுத்தினர். ராஜஸ்தான் போலீசாரின் விசாரணைக்கு பிறகு துறை ரீதியிலான நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யப்படும் என சென்னை காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது கொளத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக முனிசேகர் பணியாற்றுகிறார்.
முன்னதாக சென்னை கொளத்தூரில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை பிடிக்க சென்ற போது பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால் பெரியபாண்டியை சுட்டது யார் என்ற மர்மம் தொடர்ந்து நீடித்துக்கொண்டு வந்தது.
ராஜஸ்தான் போலீசார் நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன. முதற்கட்டமாக பெரியபாண்டியன் உடலில் இருந்த குண்டு முனிசேகர் துப்பாக்கியில் இருந்து சென்றதாகவும் முனிசேகர் தவறுதலாக சுட்டதால் தான் பெரியபாண்டி உயிரிழந்ததாகவும் ராஜஸ்தான் போலீஸ் தகவல் தெரிவித்திருந்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் மற்றும் நாதுராமின் மனைவி மஞ்சு ஆகியோரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர்.
நாதுராமின் மனைவி உடன்வந்த போலீஸ் சுட்டதிலேயே பெரியபாண்டியன் உயிரிழந்தார் எனவும் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்நிலையில் பெரியபாண்டியன் உயிரை பறித்தது முனிசேகர் துப்பாக்கி குண்டு தான் என்பது தற்போது சென்னை காவல் துறையினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் போலீசாரின் விசாரணைக்கு பிறகு துறை ரீதியிலான நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யப்படும் என சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.