தில்லியில் உள்ள ரோஹிணி ஆசிரமத்தின் நிறுவனரும், ஆன்மிக குருவுமான விரேந்தர் தேவ் தீட்ஷித் ஆசிரமத்தையும், மற்ற பகுதிகளில் இருந்த ஆசிரமங்களையும் ஆய்வு செய்த தில்லி மகளிர் ஆணைய அதிகாரிகள், பெண்களைக் கடத்தி வந்து விற்கும் தொழிலில் விரேந்தர் தேவ் தீட்ஷித் ஈடுபட்டிருக்கலாம் என்று குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் நியமித்த குழுவில் தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால், வழக்குரைஞர்கள் அஜய் வர்மா, நந்திதா ராவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் தீட்ஷித்தின் ஆசிரமங்களை ஆய்வு நடத்திய பிறகு கூறியதாவது, விஜய் விஹார், ரோகிணி உள்ளிட்ட பல இடங்களில் இருந்த ஆசிரமங்களில் 6 பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. மிகவும் சிறியதாக இருந்த அந்த ஆசிரமம், ஒரு சிறைச்சாலை போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது என்கிறார்கள்.
அங்கு தங்கியிருந்த பெண்கள் குறித்து எந்த தகவலும் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. அதில் 3 பெண்கள் சிறுமிகள் போல உள்ளனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரித்ததில், அதிகாரிகள் வருவதற்கு முன்பே, ஆசிரமத்தில் இருந்து ஏராளமான பெண்கள் வெளியேற்றப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
எனவே, தீட்ஷித் பெண்களை கடத்தி வந்து விற்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது என்றும் அவர்கள் கூறினர்.
"ரோஹணியில் செயல்பட்டு வரும் ஆன்மிக பல்கலைக்கழகத்தில் பெண்கள், சிறுமிகள் விலங்குகளைப் போல் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோர்களைச் சந்திப்பதற்கும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. அவர்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும்" என சமூக அதிகாரமளித்தல் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை உடனடியாக விசாரித்த நீதிமன்றம், சிறப்பு விசாரணை குழு அமைத்து ஆசிரமத்தில் உடனடியாக ஆய்வு நடத்தக் கோரியும், அந்த ஆசிரமம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரியும் சிபிஐ உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, ஹோஹிணி ஆசிரமத்தில் இருந்து 41 பெண்களை குழந்தை நலக் குழுவின் கடந்த வாரம் மீட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி சி. ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ரோஹிணி ஆசிரமத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "ஆசிரமத்தில் பெண்கள் சொந்த விருப்பத்தின்படியே தங்கி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் கூறியதாவது:
பெண்கள், கூண்டுகளில் அடைக்கப்பட்டு அவர்களது பெற்றோர், நண்பர்கள் ஆகியோரை பார்க்க அனுமதிக்காதபோது எப்படி அவர்கள் சுதந்திரமாக இருக்க முடியும். விலங்குகளைப் போன்று அடைத்து வைத்திருப்பது எப்படி ஆன்மிகமாகும். இதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆசிரமத்தை ஆய்வு செய்ய சென்ற நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்களை ஆசிரமத்தில் உள்ள பெண் ஒருவர் தாக்கியுள்ளார். அவர் மீது ஏன் அவதூறு வழக்குத் தொடரக் கூடாது.
தில்லியில் 8 இடங்களில் தீட்ஷித், இதேபோன்ற ஆசிரமங்களை நடத்தி வருகிறார். அங்கும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு ஆய்வு நடத்த வேண்டும். ரோஹிணி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட 41 பெண்களிடம் வயது சோதனை ஆய்வுகள் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த ஆசிரமத்தை பதிவு செய்யாமல் சட்ட விரோதமாக நடைபெற்றுள்ளது. இந்த ஆசிரமத்தின் நிறுவனரும், ஆன்மிக குருவுமான விரேந்தர் தேவ் தீட்ஷித் எங்கு உள்ளார் என்று சிபிஐ கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு தில்லி அரசும், போலீஸாரும் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை தேதியான ஜனவரி 4-அன்று விரேந்தர் தேவ் தீட்சித் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.