பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை கோரும் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சிவகாசியில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.
பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தை நடத்தி வருகின்றனர். பட்டாசுகளை வெடிப்பதால் அதில் இருந்து வெளிவரும் புகையின் காரணமாக காற்றில் மாசு கலப்பதாகவும், அதனால் பாதிப்பு ஏற்படுவதாகவும் கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் எதிர்ரொலியாக டெல்லி உட்பட சில மாநிலங்களில் கடந்த தீபாவளி அன்று பட்டாசு விற்பதற்கும், வெடிப்பதற்கும் உச்சநீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்தது.
தீபாவளிக்கு பின் நடத்தப்பட்ட ஆய்வில் காற்று மாசுக்கு பட்டாசு வெடிப்பது காரணமல்ல என்று கூறப்பட்டது. இருந்தபோதும் பட்டாசு விற்பனைக்கும், உபயோகத்திற்கும் தடைகள் விதிக்க வேண்டும் என்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் இதுகுறித்து மத்திய மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டு அறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது. இந்த பொதுநல வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 5-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பட்டாசு விற்பனையாளர்கள் தங்கள் எதிர்கால தேவைக்கான பட்டாசை உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கவில்லை.
இந்நிலையில் பட்டாசு விற்பனையும், உற்பத்தியும் முடங்கி போனதால் பட்டாசு தொழிற்சாலைகள், அதன் விற்பனை கடைகள், அதன் சார்பு தொழிலை நம்பியுள்ள அனைவரையும் பாதித்துள்ளது.
குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கு தடை செய்தால், நாடு முழுவதும் இதனை நம்பியுள்ள 1 கோடி 8 லட்சம் பேரின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டும் தொடர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க சுற்றுபுறச்சூழல் விதிகளில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.