சமீபத்தில் அமெரிக்காவை தாக்கும் சக்திவாய்ந்த ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும் வகையில் அமெரிக்கா தயாரித்த தீர்மானம் ஐநா பாதுகாப்பு கவுன்சில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட 15 நாடுகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
வடகொரியா மீது ஐநா புதிய தடைகள் விதித்திருப்பதை ஜப்பான் வரவேற்றுள்ளது.
ஐநாவின் புதிய தடையால் வடகொரியாவின் பெட்ரோல் இறக்குமதி 90 சதவீதம் வரை குறையும். வடகொரியாவின் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் காசா எண்ணெய் இறக்குமதியை குறைப்பது, இயந்திரங்கள், மின் உபகரணங்கள் உள்ளிட்ட வடகொரியா பொருட்களுக்கு தடை விதிப்பது உள்ளிட்டவை ஐநா தீர்மானத்தின் முக்கிய அம்சங்களாகும்.
இது குறித்து ஜப்பானின் உயர்மட்ட அரசாங்க பேச்சாளர் யோஷிடே சுகா கூறியதாவது : வடகொரியாவிற்கு எதிராக ஐநா ஒருமனதாக மேற்கொண்டுள்ள பொருளாதார தடைகள், வடகொரியா மீது அழுத்தத்தை அதிகரிக்க கூடியதாகும். இந்த முடிவை நாங்கள் பாராட்டுகிறோம் என்றார்.
ஆனால் இதனை கண்டித்த வடகொரியா., ஐநா விதித்துள்ள புதிய பொருளாதார தடைகள் போருக்கான நடவடிக்கையாகவே இருக்கும் என எச்சரித்துள்ளது.