நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 ஓட்டுக்கள் பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்று டெபாசிட் பெற்றார்.

Special Correspondent

கடந்த ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர், சிம்லா முத்து சோழன், 57 ஆயிரத்து, 673 ஓட்டுகள் பெற்றார்.

கடந்த தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட, தி.மு.க., 33 ஆயிரத்து, 22 ஓட்டுகள் குறைவாக பெற்று 'டெபாசிட்' பறிபோனது.

மொத்தம் 4 பேர் தபால் வாக்கிற்காக விண்ணப்பித்திருந்தனர். அதில் ஒரு வாக்கு மட்டுமே பதிவாகியிருந்தது. அந்த ஒரு வாக்கு திமுக வேட்பாளர் மருதுகணேஷ்க்கு கிடைத்துள்ளது.

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் பிரவீன்நாயரிடம் இருந்து டிடிவி தினகரன் பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "காவல்துறை, ஏவல்துறை போன்று செயல்படுகிறது. காவல்துறையை நினைத்தால் அசிங்கமாக உள்ளது. நான் இன்று முளைத்த காளான் அல்ல. நான் அகங்காரத்தில் பேசவில்லை. மக்களின் நாடி துடிப்பு எனக்கு தெரியும். 60 சதவீத வாக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். சில காரணங்களால் 50 சதவீதம் கிடைத்துள்ளது.

ஆர்.கே.தொகுதியில் இருப்பவர்கள் சாமானியர்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். நான் முன்னிலைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். நான் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க மாட்டேன். தொடர்ந்து பின்னர் சசிகலாவை சந்தித்து ஆசீர்வாதம் வாங்க இருக்கிறேன். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் விடுத்து இருக்கும் அறிக்கையில், "தேர்தல் பார்வையாளர்கள் வந்தார்கள்; சென்றார்கள். அவ்வளவுதான். "சுதந்திரமாகத் தேர்தலை நடத்துவதற்கு இரும்புக் கரம் கொண்டு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றமே கண்டிப்பான உத்தரவிட்டும் கூட, "ஹவாலா பாணியில்" வாக்குப் பதிவு தினத்தன்றே வாக்காளர்களுக்குப் பணம் வாரி வாரி இறைக்கப்பட்டதை கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்தது, ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் மட்டுமல்ல- வானளாவிய அதிகாரங்கள் கொண்ட தேர்தல் ஆணையமும் தான்!

ஆகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்குத் தோல்வி என்பதைவிட, "இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குக் கிடைத்துள்ள இமாலயத் தோல்வி" என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இப்படிப்பட்ட நிலைமை, மக்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்ற உதவுமா என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பது எனது விருப்பம்" என்று தெரிவித்துள்ளார்.

மூத்த அமைச்சர்கள் சிலரை தவிர மற்ற அமைச்சர்களும், எம்எல்ஏக்கள் அனைவரும் தினகரனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தப்படி இருக்கிறார்கள்.

இவர்களில் பலர் தினகரனை நேரில் சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளனர். கட்சியும், ஆட்சியும் தினகரன் பக்கம் செல்வதற்கு வாய்ப்பு அதிகரித்திருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்ததையடுத்து தங்கள் வசம் எம்எல்ஏக்களை வைத்துக்கொள்ள அதிமுக நிர்வாகிகள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (டிச.,25) காலை நடைபெற்றது.