182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில், பாஜக 99 இடங்களிலும் காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றது. சுயேட்சையாக நின்று எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற தலித் சமூகத்தை சேர்ந்த இளம் தலைவர் ஜிக்னேஷ் மேவானி டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
அதில் பிரதமர் நரேந்திரமோடி ஓய்வெடுக்கும் நேரம் வந்து விட்டது. இனி அவர் ராமர் கோயிலில் பணிவிடைகளை செய்து ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று சுயேட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி கூறியிருப்பது பாஜகவிற்குள் பலத்த சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
ஜிக்னேஷ் மேவானி மேலும் " பிரதமர் மோடி, திறம்பட செயலாற்றுவார் என்று நாங்கள் நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால், அவரது செயல்பாடுகள் எங்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக அளித்துள்ளது. பிரதமர் மோடியின் பேச்சுகள், மக்களுக்கு உத்வேகத்தை அளிப்பதற்கு பதிலாக, தொடர்ந்து சலிப்பையே ஏற்படுத்தி வருகின்றன.
சட்டசபை தேர்தலில், 150 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பாரதிய ஜனதா கட்சியின் கனவை, இந்த தேர்தல் தகர்த்துள்ளது. இதன் பாதிப்பு, 2019ல் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் எதிரொலிக்கும். வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்த பாஜக அரசு 8 கோடி இளைஞர்களை ஏமாற்றியுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் நாடு முழுவதும் நிலவி வருகிறது. பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே போலியான வாக்குறுதிகளை அளித்து வருகிறார். இதனால் மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பிரதமர் மோடி, ஓய்வு எடுக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. அவர் ஹிமாலயாவிற்கு சென்று அங்குள்ள ராமர் கோயிலில் பணிவிடைகளை செய்து அவரது ஓய்வுக் காலத்தினை கழித்துக் கொள்ளலாம். இனிவரும் நாட்களில், மக்களை ஒன்றிணைத்து தமது இயக்கத்தின் செயல்பாடுகளை துரிதப்படுத்தி, மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளேன்.
வரும் 2019ம் தேர்தலிலும் எங்கள் இயக்கம் மாபெரும் வெற்றியை பெறுவதற்கான வேலைகளை செய்ய இப்போதே களத்தில் இறங்க உள்ளேன் " இவ்வாறு அவர் கூறினார்.
ஜிக்னேஷ் மேவானி கூறிய கருத்துக்கள், பாஜகவில் மோடியின் தீவிர ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் புகைச்சலை உண்டாக்கி இருக்கிறது. அதே சமயம் மோடிக்கு எதிராக உள்ள பாஜக தலைவர்களிடையே ஜிக்னேஷ் மேவானியின் பேச்சு பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. மோடியின் தன்னிச்சையான செயல்பாடுகளால் பாஜக சரிவை நோக்கி செல்வதாக விமர்சனம் செய்துள்ளனர்.