ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்க பிரச்சாரம் என்ற பெயரில் பணப்பட்டுவாடாவும் வேகமெடுத்துள்ளது. ஆர்.கே. நகரில் நேற்று வீடுவீடாக ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் விநியோகம் செய்யப்பட்டது. சுமார் ரூ.100 கோடி அளவிற்கு ஆளும் கட்சியினர் கட்டுகட்டாக பணம் விநியோகம் செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.
ஏற்கெனவே கொடுத்தவர்கள், தங்கள் பகுதிக்குள் அடுத்த கட்சிக்காரர்கள் பணம் கொடுக்காத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தினகரன் அணியினர் பல இடங்களில் தடுத்து பணத்தை பறிமுதல் செய்கிறார்கள். பணப்பட்டுவாடா செய்ததாக ரூ.3 லட்சத்தை பிடித்து கொடுத்தள்ளார் தங்கதமிழ்ச்செல்வன்.
இந்நிலையில், நேற்று ஆர்.கே நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர், கருணாநிதி நகர்,விநோபா நகர், பட்டியல் நகர், கொருக்குப்பேட்டை முனியப்பன் நகர், மூப்பனார் நகர், சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணியில் இருந்தே அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் ராஜன் செல்லப்பா, தி.நகர் சத்யா ஆகியோரின் ஆதரவாளர்கள் வீடுவீடாக சென்று பணப்பட்டுவாடா செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் வீடுவீடாக சென்று பணம் விநியோகம் செய்த தேனி மாவட்டத்தை சேர்ந்த முக்தார், யாசர் அராபத், மஸ்தான் ஆகியோரை பிடித்து ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து இரண்டாயிரம் மதிப்பு கொண்ட 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், காசிமேடு, தண்டையார் நகர் பகுதிகளில் திருப்பூரை சேர்ந்த தனபால் என்பவர் வீடுவீடாக சென்று பணம் கொடுத்தார். அவரையும் திமுகவினர் பிடித்து 1 லட்சத்தை பறிமுதல் செய்து, காசிமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தண்டையார்பேட்டை வஉசி நகர் பகுதியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் சிலர் வீடு வீடாக சென்று பணம் வழங்கியதாக தெரிகிறது. அப்போது அங்கிருந்த திமுகவினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் இருந்து வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக வைத்திருந்த லட்சக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதனிடையே, இன்று அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தேர்தல் ஆணையத்துக்கு பரபரப்பான புகார் ஒன்றை அனுப்பியிருக்கிறார். தொகுதியில் உள்ள குக்கர் கடையில் இருந்து ஒன்னரைக் கோடி ரூபாய்க்கு குக்கர் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். தினகரனின் செலவுகணக்கில் இதை எழுதி அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மதுசூதனன் கேட்டிருக்கிறார்.
இதுபோன்ற சம்பவங்கள் தொகுதியில் அடுத்தடுத்த நடக்கும் நிலையில் தேர்தல் செலவினப் பார்வையாளர் தொகுதிக்கு வந்துள்ளார். கடந்தமுறையைப் போல இந்தமுறையும் தேர்தலை ரத்துசெய்ய வைக்கவே அதிமுகவினர் பகிரங்கமாக பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளதாக கருதப்படுகிறது.
பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்கத் தவறிவிட்டதாக திமுகவினர் குற்றம்சாட்டி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மறியலில் ஈடுபட்டனர். பணப்பட்டுவாடாவில் ஈடுபடும் வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் திமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் திருமாவளவன் கூறியிருக்கிறார்.
அதேசமயம், பணப்பட்டுவாடா செய்யப்பட்டதை கண்டித்து திமுகவினர் , தினகரன் அணியினர் போராட்டம் நடத்தியதில் ஆர்.கே.நகரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
அடுத்த இரண்டு நாட்களில் ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக அதிரடி முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் மீண்டும் ரத்தாகும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
இந்த முறையும் தேர்தல் ரத்து செய்யப்படும் நிலை உருவானால், மாநில அரசுக்கே ஆபத்து ஏற்படலாம் என்றும் சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.