இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை. கடலுக்கடியில் சுமார் 91 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் சுமார் 20 நொடிகள் உணரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாலை 2.30 மணியளவில் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. கடலோரப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பலாம் என தெரிவித்துள்ள அதிகாரிகள். இருப்பினும் தங்கள் வீடுகள் பாதுகாப்பாக இல்லையென்றால் தற்காலிக குடில்களில் தங்கி கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி சுமத்ரா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் பலியானது நினைவிருக்கலாம்.