பிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம் இருப்பதை நாசா நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். நமது சூரியக் குடும்பத்தைப் போல் 8 கிரகங்களுடன் இருப்பதும் தெரிய வந்துள்ளதாக நாசா தகவல் அளித்துள்ளது. நாசா விண்ணுக்கு அனுப்பிய கெப்ளர் விண்கலம் புதிய சூரியக் குடும்பத்தை அடையாளம் கண்டுள்ளது.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வெளிக்கோள்கள், நட்சத்திரத்தைச் சுற்றிவரும் ஒன்று அல்லது இரண்டு கோள்களாகவே இருந்திருக்கின்றன.
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ட்ரப்பிஸ்ட்1’ மட்டுமே அதிசயமாக ஏழு கோள்களைக் கொண்டிருந்தது. ஆனால், எட்டுக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை.
கெப்ளர் கண்டுபிடித்த இந்தச் சூரியத் தொகுதிக்குக் ‘கெப்ளர் 90’ எனவும், அதைச் சுற்றிவரும் எட்டுக் கோள்களும் முறையே கெப்ளர் 90B, கெப்ளர் 90C, ....., கெப்ளர் 90H எனவும் பெயரிடப்பட்டிருக்கிறது.
விண்வெளியில் நமது சூரிய குடும்பத்திற்கு அப்பால் ஒரு கோள் இருப்பதை தேடுவதற்கு, கெப்ளர் தொலைநோக்கி திரட்டி அளித்த விவரங்களில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் சிக்னல்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதால், செயற்கை நுண்ணறிவு முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த அடிப்படையில், நமது சூரிய குடும்பத்தைப் போலவே 8 கோள்கள் சுற்றி வரும் நட்சத்திரம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
2 ஆயிரத்து 545 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள கெப்ளர் 90 என்ற அந்த நட்சத்திரத்தை சுற்றி வரும் 8 கோள்களில் எதுவும் உயிர்வாழத் தகுதியற்றது. இதில் கெப்ளர் 90ஐ என்ற கோள் பூமியை போல நிலத்தரையை கொண்டதாக இருக்கலாம் என்றாலும், சூரியனுக்கு மிக நெருக்கமாக இருப்பதால் அதிக வெப்பநிலை கொண்டதாக இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.