மோடி அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் அமெரிக்கா டிரம்ப் அரசின் கடுமையாக்கப்பட்ட விசா சட்ட விதிகள் காரணமாக இந்தியாவில் உள்ள காக்னிசென்ட், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றன.
ஆனால் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வெரிஸான் நிறுவனம் கடந்த இரண்டு நாட்களில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் பணிபுரிந்து வந்த 993 பேரை திடீரென நீக்கம்செய்துள்ளது.
வெரிஸான் நிறுவனம் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி, தனது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. அதிலும் அலுவலகத்திலிருந்த மூத்த ஐ.டி மேலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஊழியர்களை தனியார் கன்சல்டன்ஸியின் துணையோடு வெளியில் துரத்தியிருக்கிறது.
இந்தியாவில் செயல்படும் வெரிஸான், 14 சதவிகித ஊழியர்களை அதிரடியாக நீக்கிவிட்டதாகக் கடந்த 12-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய வெரிஸான் ஐடி ஊழியர்கள் , " வரும் 2018 பிப்ரவரி மாதத்துக்குள் 50 சதவிகித ஊழியர்களை நீக்கும் முடிவில் வெரிஸான் இருக்கிறது. சென்னையில் ஒலிம்பியா டெக் பார்க் மற்றும் தரமணி ஆர்.எம்.எக்ஸ் வளாகங்களில் செயல்படும் வெரிஸான் நிறுவனத்தில் சுமார் 3 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களில் பலரும் வேலை இழந்துள்ளனர். முன்பின் தெரியாத முரட்டு ஆட்களை வைத்து வைத்து எங்களை வெளியேற்றுவார்கள் எனக் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை" என வேதனைப்படுகின்றனர்.
யூனியன் ஆஃப் ஐடி & ஐடிஎஸ் தொழிலாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அழகுநம்பி வெல்கினி “வெரிஸான் நிர்வாகம், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சிக்கன நடவடிக்கை என்கிற பெயரால் இப்படிப்பட்ட சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மாநில அரசிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் இத்தகைய நடவடிக்கையில் வெரிஸான் ஈடுபட்டுள்ளது என்பது இந்திய தொழிலாளர் சட்டங்களுக்குப் புறம்பானது. இந்த தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று கோரியும் தொழிலாளர் நல ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியுடன் நாளை கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது, சங்கத்தின் சார்பில் வேலை இழந்த ஊழியர்களின் எதிர்காலத்துக்கான வழிகாட்டல் மற்றும் மனரீதியாகப் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு, மனநல ஆலோசனைகளை வழங்கிவருகிறோம். விரைவில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்” என்றார் .
இதுதொடர்பாக, வெரிஸான் நிறுவன அதிகாரி ஒருவர், " புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்துவதற்காகவே சில திட்டங்களை செயல்படுத்துகிறோம். தொடர்ந்து பல சவால்களை வென்று வெற்றியுடன் தொடர்வதற்காகவே இதை நடைமுறைப்படுத்தியுள்ளோம். இந்த மாற்றம் என்பது, பணியாளர்களின் பணிப் பண்பை மாற்றியமைக்கிறது. இதில் சிலர் வேலை இழக்கத்தான் செய்வார்கள். ஐ.டி தொழிலின் எதிர்காலம் கருதி நிறுவனத்துக்குத் தேவையான தகுதியான நபர்கள் மட்டுமே தக்கவைக்கப்படுவார்கள்” என்றார்.