மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
மியான்மர் அரசியல் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தவரோ, அவரின் குழந்தைகளோ நாட்டின் உயரிய பதவியை வகிக்கமுடியாது. இதன் அடிப்படையில், ஜனநாயகத்துக்கான தேசிய கட்சியின் தலைவரான ஆங் சான் சூகி, இங்கிலாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்ததால் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, அவர் தனது ஆதரவாளர்களும் நம்பிக்கைக்குரியவருமான ஹிதின் கியாவ் என்பவரை சூகி களம் இறக்கினார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆங் சான் சூகியின் ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ்(67) மியான்மர் நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆங் சான் சூகி அரசு ஆலோசகராக இருந்து வருகிறார்.
மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் செல்லும் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரமாகி உள்ளது.
மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 3.70 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த வருடத்து செப்டெம்பர் மாதத்தில் கண்டனம் தெரிவித்தார். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மியான்மர் அரசு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மியான்மரின் ராக்கைன் பகுதியில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை இனப்படுகொலை செய்யும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதை உடனடியாக மியான்மர் அரசு நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்நிலையில் மியான்மரில் ராக்கைன் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாத பிற்பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் ஒரு மாதத்தில் மட்டும் 6,700 பேர் கொல்லப்பட்டதாக தனியார் மனித உரிமை அமைப்பு ( Doctors Without Borders ) கூறியுள்ளது.
இதுகுறித்து தனியார் மனித உரிமை அமைப்பு (Doctors Without Borders) இன்று (வியாழக்கிழமை) கூறும்போது, ''மியான்மரில் கலவரம் ஏற்பட்ட ராக்கைன் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் மட்டும் 6,700 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 730 பேர் குழந்தைகள் (ஐந்து வயதுக்குக் குறைவானவர்கள்)'' என்று கூறப்பட்டுள்ளது.
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம் பெண்களை அந்நாட்டு ராணுவ வீர்ரகள் திட்டமிட்டு கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக அங்கிருந்து தப்பி வங்கதேசத்தில் அகதிகளாக குடியேறியுள்ள சிறுமிகள், பெண்கள் உட்பட 29 பேரிடம் அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) செய்தி நிறுவனம் சமீபத்தில் நடத்திய நேர்காணலில் வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது