குமரி மாவட்டத்தை உலுக்கிய ஒகி புயல் ஏற்படுத்திய பேரிடரின் சுவடுகள் இன்னும் மறையவில்லை. மாவட்டம் முழுவதும் விழுந்து கிடந்த மரங்களை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
ரப்பர் தோட்டங்களில் ஏற்பட்ட சேதத்தை இன்னும் முழுமையாகக் கணக்கிட முடியவில்லை. மலைப் பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளில் மரங்கள் விழுந்துகிடப்பதால், பல இடங்களுக்கு செல்லவே முடியாத நிலைமை உள்ளது.
குமரி மாவட்டத்தில், ஒகி புயல் காரணமாக பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட ரப்பர் மரங்கள் சாய்ந்ததால், 10,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
சூறாவளிக் காற்றில் சாய்ந்த மின் கம்பங்களைச் சரிசெய்து, பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் கொடுக்கப்பட்ட நிலையில், மலைப் பகுதிகளில் இரண்டு வாரமாக மின்சாரம் இல்லை.
ஒகி புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 104 என மீனவர் அமைப்பினர் கணக்கிட்டுள்ளனர். 376 பேர் காணாமல் போயிருப்பதால், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது.
சாலைகளில் மரங்கள் விழுந்துகிடப்பதால், போக்குவரத்து வசதியும் இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். ஒகி புயலின்போது கடல் தொழிலுக்குச் சென்று, இதுவரை கரை திரும்பாதவர்கள் குறித்து மீனவ கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இது தொடர்பாக ஆலய நிர்வாகிகள் எடுத்த கணக்கெடுப்பின்படி, நீரோடி கிராமத்தில் 37 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் 5 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. 5 படகுகள் மூழ்கியதாகவும் ஒரு படகு காணாமல் போயிருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.
மார்த்தாண்டம் துறையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் 25 பேர் காணாமல் போனதாகவும் தெரியவந்துள்ளது. வல்லவிளை கிராமத்தில் 3 பேரும், இரவிபுத்தந்துறையில் 5 பேரும், சின்னத்துறையைச் சேர்ந்த 44 பேரும், தூத்தூரில் 3 பேரும், பூத்துறையில் 4 பேரும் இரயுமந்துறையைச் சேர்ந்த 3 பேரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 8 மீனவ கிராமங்களில் காணாமல்போனவர்கள், மூழ்கிய படகுகள், காணாமல்போன படகுகள் சேதமடைந்த வலைகள் உள்ளிட்ட பாதிப்புகள்குறித்தும் கணக்கிடப்பட்டிருக்கிறது. மீன்வர்களின் பெயருடன் 104 பேர் பலியானதாக வெளியிடப்பட்ட பட்டியலால், மீனவ கிராமங்களில் சோகம் சூழ்ந்துள்ளது.