தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோயில், திருச்செந்தூர். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் பிரசித்தி பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்று. முருகன் கோயிலுக்கு அருகில் வள்ளிக்குகை உள்ளது. இதனை புராணத் தொடர்பு கொண்ட குகை என்பார்கள்.

Special Correspondent

இந்த வள்ளி குகைக்கு அருகில், பிரகாரத்தை வலம் வரும் மண்டபம் ஒன்று உள்ளது. இந்த கோவிலின் பிரகார மண்டபம் இன்று காலை 10.45 மணி அளவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 15 அடி நீளத்திற்கு மேற்கூரை விழுந்துள்ளது.

அங்கு எப்போதும் உள்ளுரைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற பெண்மணி மோர் விற்றுக்கொண்டிருப்பார். இன்று பிரகார மண்டபம் இடிந்து விழுந்தபோது, அந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. மீட்புப்பணிகளின் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

ஏராளமான பக்தர்கள் தரிசித்துக் கொண்டிருந்த வேளையில், மண்டபம் இடிந்து விழ... இன்னும் பலர் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Special Correspondent

தங்கத் தேர் வலம் வருவதற்காக திரைப்பட தயாரிப்பாளர் சின்னப்பத் தேவர் வெளிப்பிரகாரம் கட்டிக்கொடுத்துள்ளார்.

45 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தை சரியாக பராமரிக்கவில்லை. கடலோரமாக இருப்பதால் உப்புக் காற்று படும் என்பதால் அவ்வப்போது பராமரிக்க வேண்டும்.

பராமரிக்காத காரணத்தினால்தான் தற்போது 15 அடி நீளத்திற்கு விழுந்துள்ளது என்று கோவில் நிர்வாகம் மீதும், தமிழக அறநிலையத்துறை மீதும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோயிலில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது பக்தர்களுக்கும் பொதுமக்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.