கொளத்தூரில் கடந்த மாதம் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக திருடர்களை பிடிக்க சென்ற போது சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியை ராஜஸ்தானில் கொள்ளை கும்பல் சுட்டுக்கொன்றது.

Special Correspondent

6 பேர் கொண்ட தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்றிருந்தனர். காவல் ஆய்வாளர் உயிரிழப்புக்கு காரணம் கொள்ளையர்களை பிடிக்க சென்ற தமிழக போலீசாருக்கு ராஜஸ்தான் போலீசார் உதவவில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுவே சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் உயிரிழக்க காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயிரிழந்த பெரிய பாண்டியனின் மனைவி பானுரேகா மதுரவாயல் காவல் ஆய்வாளராக கடந்த மாதம் தான் பொறுப்பேற்றார். கொள்ளையர்களை பிடிக்க வெள்ளிக்கிழமை இரவு ராஜஸ்தான் புறப்பட்டு சென்றார். கொள்ளையர்களை பிடிக்க அதிக அளவிலான காவலர்களை அனுப்பியிருந்தால் எனது கணவர் உயிரிழந்திருக்க மாட்டார் என பானுரேகா கண்ணீருடன் கூறினார்.

Special Correspondent

என் அப்பா தான் தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எங்களை பள்ளிக்கு கிளம்ப சொல்லுவார் என காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் மகன் ரூபன் கண்ணீடருன் பேட்டியளித்துள்ளார். ஆனால் அவரிடம் இருந்து இன்று காலை அழைப்பு வரவில்லை என்று சொன்ன போது மற்றவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

தமிழக போலீஸ் மீதான தாக்குதல் குறித்து ராம்புரா காவல் நிலையத்தில் சென்னை போலீசார் புகார் அளித்துள்ளனர். ஜோத்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள பெரியபாண்டியன் உடலை விமானம் மூலம் சென்னை கொண்டுவர காவல்துறை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பெரியபாண்டியனின் மகன்கள் செல்வன் ரூபன், செல்வன் ராகுல் ஆகியோரின் படிப்புச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

ராம்புரா பகுதியில் இருக்கும் கொள்ளையர்களை அழிப்பதில் தீவிரம் காட்டி வருகிறோம் என பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்கவ் பேட்டியளித்துள்ளார். காவல் ஆய்வாளர் பெரியபாண்டி கொலை தொடர்பாக, விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக போலீசாருக்கு, ராஜஸ்தான் போலீஸ் உறுதுணையாக இருக்கும் எனவும் தீபக் பார்கவ் தெரிவித்துள்ளார்.

பெரிய பாண்டியை சுட்டுக்கொன்ற இடத்திற்கு தமிழக போலீசார் பாலி மாவட்டத்திற்கு பிற்பகல் செல்கின்றனர். ஜோத்பூரில் இருந்து பாலி மாவட்டத்திற்கு சாலை மார்க்கமாக செல்ல 5 மணி நேரமாகும்.

ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட சென்னை மதுரவாயல் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்தினருக்கு சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், துணை ஆணையர் சுதாகர், உதவி ஆணையர்கள் ஜான் சுந்தர், ஆல்பர்ட்வில்சன் உள்ளிட்டோர் நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.

இதனிடையே பெரியபாண்டியனை சுட்டுக்கொன்ற கொள்ளையர்கள் தமிழக போலீசிடமிருந்து தப்பிக்க முடியாது எனவும் சென்னை மேற்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் சந்தோஷ்குமார் ஆவேசமுடன் கூறியுள்ளார்.