கன்னியாகுமரியில் காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Special Correspondent

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 623 மீனவர்கள் இன்னும் காணவில்லை” என்று அம்மாவட்ட கலெக்டர் சாஜன்சிங் சவான் அறிவித்திருப்பது, கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் சோகங்களை எல்லாம் கண்டு கலங்கி இருப்போரை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

“197 மீனவர்கள் காணவில்லை” என்று தலைமைச் செயலாளரும், “260 பேரை காணவில்லை” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் முரண்பாடாகத் தெரிவித்திருந்த நிலையில், இப்போது மாவட்ட கலெக்டரே 623 மீனவர்கள் காணவில்லை என்று கூறியிருப்பது, “ஒகி புயல்” தாக்குதல் முடிந்து 13 நாட்கள் கடந்த பிறகும், எத்தனை மீனவர்கள் மீட்கப்படவில்லை என்பது குறித்த துல்லியமான கணக்கீடு கூட இந்த அரசிடம் இல்லை என்ற வெட்கக்கேட்டை வெளிப்படுத்தியுள்ளது.

‘ஒகி’ புயல் பாதித்த பகுதிகளை இதுவரை நேரில் சென்று பார்வையிடாமல், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் ஆறுதல் சொல்லாமல், காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியையும் நேரடியாகக் கண்காணிக்காமல், எம்.ஜி.ஆர் விழா கொண்டாட்டத்திலும், ஆர்.கே.நகர் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டிருக்கும் கல்நெஞ்சம் கொண்ட அலட்சிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த மாநிலத்தை ஆளும் தகுதியையும், தார்மீக உரிமையையும் அறவே இழந்துவிட்டார்.

“கடைசி மீனவர் மீட்கப்படும் வரை கடற்படை மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்படும்” என்று கூறும் மத்திய பா.ஜ.க. அரசு, மற்ற மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்களையும், காணாமல் போன மீனவர்களையும் மீட்டுக்கொண்டு வந்து மாவட்டத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்?. தங்களின் ரத்த சொந்தங்களை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஜனநாயக ரீதியில் போராடினால், ரெயில்வே போலீசும், அ.தி.மு.க. அரசும் அவர்கள் மீது வழக்குப் போடுவது ஏன்? மீட்புப்பணியில் காட்டாத அக்கறையை மீனவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கான அடக்குமுறை அராஜகத்தில் அ.தி.மு.க. அரசு ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆகவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன மீனவர்களை மீட்கவும், ‘ஒகி’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாகச் சீரமைக்கவும், இறந்துபோன மீனவ குடும்பங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, கூடுதல் நிதியுதவி ஆகியவற்றை வழங்கக்கோரியும், மீட்புப்பணிகளில் மத்திய-மாநில அரசுகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், தி.மு.க. மீனவரணி சார்பில் 12-12-2017 அன்று (இன்று) சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் போராட்டம் என் தலைமையில் நடைபெறும் என்றும், இது மீனவர்களுக்கான பிரச்சினை என்று கருதாமல் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பாகக் கருதி, அனைத்துத் தரப்பு மக்களும் தி.மு.க. போராட்டத்தில் என்னுடன் பங்கேற்று, மத்திய-மாநில அரசுகளுக்கு தங்களுடைய கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதனிடையே நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், வள்ளவிளை பகுதியில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் ஒகி புயலில் சிக்கி இதுவரையில் கரைக்கு திரும்பவில்லை. அவர்களின் விபரங்களை நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சந்தித்து கொடுக்க நேரில் சென்றார். ஆட்சியர் இல்லாததால், பேரிடர் மேலாண்மை அதிகாரியிடம் வழங்கி, மீனவர்களை விரைவில் மீட்டு தருமாறு கேட்டு கொண்டார். இச்சந்திப்பின் போது காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் உ. தனியரசு உடன் இருந்தார்.