ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் புதிதாக சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டது. ஏற்கெனவே இங்கிருந்த சோமாஸ்கந்தர் சிலை பழுதடைந்திருந்ததால், புதிய சிலையைச் செய்ய தமிழக இந்துசமய அறநிலையத்துறை திட்டமிட்டது. இதற்காகப் பக்தர்களிடமிருந்து தங்கம் பெறப்பட்டது

Special Correspondent

மேலும் உற்சவர் ஏகாம்பரநாதர், ஏலவார் குழலி அம்மன் பஞ்சலோகச் சிலைகள் திருடு போனது தொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த சிவபக்தர் அண்ணாமலை மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோர் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்தனர். ஆனால் இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கின்றனர்.

இப்பிரச்னை குறித்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் முறைப்படி வழக்குப் பதிவு செய்து விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நவம்பர் 20-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிபதி மீனாட்சி இந்த வழக்கை விசாரித்து, மனுதாரர் அளித்துள்ள இந்தப் புகார் மனுவை விசாரித்து வழக்கு பதிவுசெய்யுமாறு சிவகாஞ்சி காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.

புகார் குறித்து சட்டப்படி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும், 19 நாள்களாக சிவகாஞ்சி காவல் நிலையத்தில் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் சோமாஸ்கந்தர் சிலை மோசடி, உற்சவர் சிலை, பஞ்சலோக திருவாச்சி திருடு போனது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படாத நிலையில், காலை 10.30மணிக்கு வந்த ஐஜி.பொன் மாணிக்கவேல் மாலை 4.30 வரை 6 மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் புறப்பட்டுச் சென்றார்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மனுதாரர் அண்ணாமலை, தினேஷ் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவைப் பெற்று, இதுவரை ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என சிவகாஞ்சி போலீஸாரிடம் கேட்டறிந்தார்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிவிப்பு, இணை ஆணையர் உத்தரவு உள்ளிட்டவை தொடர்பாக மனுதாரரிடம் விவரம் கேட்டறிந்தார்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி, இரண்டு வழக்குகள் பதிவு செய்ய உத்தரவிட்டார். பஞ்சலோக திருவாச்சி திருடு போனது தொடர்பாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உடனடியாக அவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டன.

மாஸ்கந்தர் சிலை மற்றும் பஞ்சலோக திருவாச்சி சிலை திருடு போனது தொடர்பாக 9 பேரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதுஎன தெரிவித்த காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"சிவகாஞ்சி காவல்நிலையத்தில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரு வழக்குகள் நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முதல் வழக்கானது காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் 1,300 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சோமாஸ் கந்தர் சிலையில் உள்ள பஞ்சலோக திருவாச்சி சிலை திருடு போனது தொடர்பாகவும், சோமாஸ்கந்தர் சிலையில் சுமார் 75 சதவீதம் வரை தங்கம் இருப்பது தெரிய வருவதாக திருக்கோயில் ஸ்தபதி ஒருவர் கடிதம் மூலம் அறநிலையத்துறையிடம் தெரியப்படுத்துகிறார். தொடர்ந்து அறநிலையத்துறை இணை இயக்குநர், தங்கம் பெறப்படுவது தொடர்பாக 3 நாள்களில் உத்தரவிடுகிறார்.

அதைத்தொடர்ந்து, ஏகாம்பரேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் தங்கம் பெறுவது தொடர்பாக பொது அறிவிப்பு வெளியிடுகிறார். அதில், சோமாஸ்கந்தர் சிலை பின்னம் ஆகிவிட்டது. இதைச் சரிசெய்வதற்கு 5.45 கிலோ தங்கம் வேண்டும் என அறிவிப்பு செய்யப்படுகிறது. தொடர்ந்து, தங்கமானது நன்கொடையாகப் பெறப்படுகிறது.

பெறப்பட்ட தங்கம், பஞ்சலோகத்துடன் கலந்து சுவாமிமலை ஸ்தபதி மூலம் சோமாஸ்கந்தர் சிலை வடிக்கப்படுகிறது. இதில், வடிக்கப்பட்ட சிலையில் எத்தனைச் சதவீதம் தங்கம் உள்ளது என ஆய்வு செய்யவேண்டும் என்பது தொடர்பாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை விசாரணை செய்யப்பட்டது. தொடர்ந்து, இவ்விரு வழக்குகளும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன.

அதுபோல், இரண்டாவது வழக்கில், தலைமை ஸ்தபதி முத்தையா, ஏகாம்பரேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தானீகர் ராஜப்பா, செந்தில், கிருஷ்ணமூர்த்தி, சங்கர், பரத், மாசிலாமணி வினோத்குமார் ஆகிய 9 பேர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் " என்று தெரிவித்தார் ஏ. டி.எஸ்.பி. வீரமணி.