அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சீனாவிடம் இலங்கை நேற்று முறைப்படி ஒப்படைத்தது.

Special Correspondent

இதனை கண்டித்த அந்நாட்டின் எதிர்கட்சிகள் இலங்கை நாட்டின் சொத்தை சீனாவிடம் விற்று விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளன. சீனாவிடம் இலங்கை ரூ.51 ஆயிரம் கோடி (8 பில்லியன் டாலர்) கடன் வாங்கியிருந்தது. இந்த கடனை இலங்கை அடைக்கவில்லை.

இலங்கையில் அம்பாந்தோட்டை என்றழைக்கப்பட்ட ஹம்பந்தோட்டா துறைமுகம் இந்திய பெருங்கடலில் தென்முனைப் பகுதியில் அமைந்திருப்பதால் இதை மேம்படுத்தி பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் நல்ல பயன் அடையலாம் என சீனா நினைத்தது.

இங்கு மிகப் பெரிய துறைமுகம் அமைந்தால், இலங்கையை சுற்றி இந்திய பெருங்கடல் பகுதி வழியாக செல்லும் சர்வதேச வர்த்தக கப்பல்கள் அனைத்தும் இங்கு நின்று செல்லும்.

இதன் மூலம், சீனாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்துக்கும் இத்துறைமுகம் பெரும் உதவியாக இருக்கும். இதில், முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே கையெழுத்திட்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை தனது சொந்த மாவட்டத்திலேயே தொடங்கினார்.

நாட்டின் சொத்தை சீனாவுக்கு விற்பதாக எதிர்க்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்நிலையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிதாக ஆட்சிக்கு வந்த அரசு, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 70 சதவீத பங்குகளை ரூ.7 ஆயிரம் கோடிக்கு (1.1 பில்லியன் டாலர்) விற்கும் ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதம் கையெழுத்தானது.

இதன்படி இலங்கைக்கு ஆரம்பகட்ட தொகையாக ரூ.1,934 கோடி (300 மில்லியன் டாலர்) கிடைத்தது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை முறைப்படி சீனாவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடந்தது.

இதில் பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ‘‘இந்த ஒப்பந்தம் மூலம் நாம், நம்முடைய கடனை திருப்பிச் செலுத்த தொடங்கியுள்ளோம். இந்திய பெருங்கடல் பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகம் மிகப் பெரிய துறைமுகமாக மாற்றப்படும். இப்பகுதியில் பொருளாதார மண்டலமும், தொழிற்சாலைகளும் பெருகும். இது பொருளாதார வளர்ச்சிக்கும், சுற்றுலா மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும்’’ என்றார்.

இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கமாகும். இதுவே, இந்தியாவுக்கு கவலை அளிக்கும் விஷயமாக இருந்து வந்தது. இந்நிலையில், இந்தியாவுக்கு மிக அருகிலேயே சீன கட்டுப்பாட்டில் இயங்கும் துறைமுகம் அமைய உள்ளது.

இங்கு சீனா தனது போர்க் கப்பல்களை நிறுத்தும் வாய்ப்புகள் ஏற்பட்டால், அது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சறுத்தலாக இருக்கும் என இலங்கையிடம் இந்தியா கூறியது. இதை மறுத்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ‘‘எந்த நாட்டின் கடற்படை தளமாகவும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை பயன்படுத்த வாய்ப்பில்லை’’ என தெரிவித்தார்.

சர்வேதச வல்லுனர்கள் இந்தியாவில் அயல்நாட்டு கொள்கையில் பின்னடைவு என்று இந்த சம்பவத்தை வருணிக்கின்றனர்.