ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட வேலுச்சாமி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கடந்த முறை இருந்த பிரவீன் நாயர் புதிய தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆர்கே நகர் தேர்தல் அதிகாரியாக இருந்த வேலுச்சாமி கடந்த 5ஆம் தேதி விஷாலின் வேட்புமனுவை ஏற்பதில் குளறுபடி ஏற்பட்டது.
முதலில் வேட்புமனு நிராகரிப்பு பின்னர் ஏற்பு என கூறப்பட்ட நிலையில் நிராகரிப்பு என்று பின்னர் தகவல் வெளியானது. இதனாலே விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து நள்ளிரவில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் விஷால் புகார் அளித்தார். ஆளும்கட்சியின் மிரட்டலாலேயே தன்னை முன்மொழிந்தவர்கள் பின்வாங்கியதாக குற்றம்சாட்டினார் விஷால்.
இதுகுறித்து பேட்டியளித்த தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வேட்புமனுவை நிராகரித்தால் அதற்கான காரணத்தை எழுத்துமூலம் தேர்தல் நடத்தும் அதிகாரி அளிக்க வேண்டும். வாய்மொழியாக சொல்ல முடியாது எனக்கூறியுள்ளார்.
வேலுச்சாமி செய்த பிழை ஆனால் விஷால் விஷயத்தில் அந்த நடைமுறையை பின்பற்றுவதில் பிழை உள்ளது என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஒப்புக்கொண்டுள்ளார்.
முதலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக கூறிய வேலுச்சாமி, அதன் பிறகு நிராகரிக்கப்பட்ட மனு ஏற்கபட்டதாகவும் வாய்மொழியாக கூறியுள்ளார் என்றும் லக்கானி தெரிவித்துள்ளார். தேர்தல் கமிஷனில் அறிக்கை மேலும் இறுதியில்தான் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக கூறியுள்ளார்.
இதுகுறித்தும், வேட்புமனு தாக்கல் செய்த போது தேர்தல் பார்வையாளர்கள் இல்லாதது குறித்தும் தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்திருந்தார். விஷால் வேட்புமனு விவகாரத்தில் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி ஒரு சார்பாக இருந்தது அப்பட்டமாக தெரிந்ததாலேயும், விஷால் விஷயத்தில் அவர் செய்த பிழையுமே அவர் தூக்கியடிக்கப்பட்டதற்கான காரணம் என கூறப்படுகிறது.
தேர்தல் அதிகாரி வேலுச்சாமி ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக விஷால் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் விஷால் தரப்பு குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.