முன்னறிவிப்பு மத்தியில் பிஜேபி மோடி அரசும் மாநிலத்தில் அதிமுக அரசும் சரியான நேரத்தில் கொடுக்க தவறியதால் ‘ஒகி’ புயல் வீசியபோது அரபிக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக, கேரள மீனவர்களின் படகுகள் அதில் சிக்கி நிலைகுலைந்தது. சில படகுகள் கடலில் மூழ்கிப்போனதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதில் இருந்த மீனவர்களின் நிலையும் என்னவென்று தெரியவில்லை. திசை மாறிய படகுகள் தத்தளித்தபடி குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரையோரம் ஒதுங்கியது. அதில் இருந்த மீனவர்களும் அங்கே தஞ்சம் அடைந்தனர். அந்த மீனவர்களை அழைத்துவர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக கூறப்பட்டாலும், கர்நாடக மாநில கரையோரம் ஒதுங்கிய மீனவர்கள் பலர் அவர்களாகவே திரும்பி வந்துவிட்டனர்.
இதுவரை 268 தமிழக மீனவர்கள் உள்பட 672 மீனவர்கள் மீட்கப்பட்டு இருப்பதாக கடலோர காவல் படையினர் தெரிவித்தனர்.
கடலில் காணாமல்போன மீனவர்களின் எண்ணிக்கை 65 என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மீனவர்கள் தரப்பில் 1,013 மீனவர்களை காணவில்லை என்றும், உடனடியாக தேடுதல் வேட்டையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி மற்றும் சென்னையில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில் மறியல் மற்றும் மத்திய மாநில அமைச்சர்களுக்கு எதிர்ப்பு என்று மீனவர்கள் போராட்டம் நடத்தினர் ஒன்பது நாள் ஆகியும் மத்திய மாநில அரசுகள் முறையாக பதில் சொல்லாததால் போராடியும் வருகின்றனர்...
இதற்கிடையே வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் நேற்றுமுன்தினம் நிருபர்களிடம் கூறும்போது, “582 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. காணாமல்போன மீனவர்களை தேடும் பணியில் கடற்படை, விமானப் படை, கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாநில கடற்கரைகளில் ஒதுங்கியுள்ள சுமார் 2 ஆயிரம் மீனவர்களை அழைத்துவர தமிழக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சென்றுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இதனிடையே புயல் பாதிப்பு குறித்து கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த மீனவர் நிக்சன் நிருபர்களிடம் கூறிய விவரம் :
" நாங்கள் நவம்பர் 21-ந் தேதி கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகேயுள்ள தேப்பூர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்றோம். எங்கள் படகில் மொத்தம் 18 பேர் இருந்தோம். கோவாவுக்கு மேற்கே நடுக்கடலில் நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம்.
அப்போது, கர்நாடகாவில் இருந்து படகில் மீன்பிடிக்க வந்த மீனவர்கள் எங்களிடம் புயல் குறித்து கடலோர காவல் படையினர் எச்சரிக்கை செய்ததாக தெரிவித்தனர். உடனே நாங்களும் திரும்பி சென்றுவிடலாம் என்று புறப்பட்டோம். ஆனால் புயல் தாக்குதலில் சிக்கி கர்நாடக மாநிலத்தில் கரை ஒதுங்கினோம்.
தமிழக அரசு எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நாங்களாகவே அங்கிருந்து திரும்பி வந்துவிட்டோம். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற பல மீனவர்களை இன்னும் காணவில்லை. பல பேரின் உடல்கள் கடலில் ஆங்காங்கே மிதப்பதாக மீனவர்கள் கண்ணீருடன் வந்து எங்களிடம் சொன்னார்கள். அந்த உடல்களை கூட மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீனவர்களே சிறிய படகில் சென்று ஒவ்வொரு உடலாக பிளாஸ்டிக் பையில் கட்டி எடுத்து வருகிறார்கள்.
கேரள கடல் பகுதியில் அங்குள்ள மீனவர்களை கப்பலில் ஏற்றிக்கொண்டு, காணாமல்போன மீனவர்களை கடற்படையினர் தேடிவருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அதுபோன்ற நிலை இல்லை. லட்சத்தீவில் 20 விசைப் படகுகள் கரை ஒதுங்கியிருப்பதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. ஆனால் அங்குள்ள மீனவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை. உடனடியாக அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று அவர் கூறினார்.